Nirbhaya case: 2012, டிசம்பர் 16 ஆம் தேதி, மருத்துவ மாணவி நிர்பயாவை இந்த 4 பேர் மற்றும் ஒரு சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
ஹைலைட்ஸ்
- இன்று காலை 5:30 மணிக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்
- தற்போது அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது
- திகார் சிறையில் குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்
New Delhi: Nirbhaya Case: நிர்பயா வழக்கின் குற்றவாளிகளின் 4 பேரும் இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டனர். டெல்லி திகார் சிறையில் தங்களின் கடைசி இரவை 4 குற்றவாளிகளும் தனிமையில் கழித்துள்ளதாகச் சிறைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அக்ஷய் தாக்கூர், 31, பவண் குப்தா, 25, வினய் ஷர்மா, 26 மற்றும் முகேஷ் சிங், 32 ஆகிய 4 குற்றவாளிகளும் இன்று அதிகாலை 5:30 மணிக்குத் தூக்கிலிடப்பட்டனர். 2012 ஆம் ஆண்டு டெல்லியில், மருத்துவ மாணவி நிர்பயாவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அவர்கள் இன்று தூக்கிலிடப்பட்டனர்.
தூக்குத் தண்டனைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில், தண்டனைக்கு எதிராக புதிய மனுவை குற்றவாளிகள் தாக்கல் செய்தனர்.
தங்களது கடைசி இரவில் 4 குற்றவாளிகளும் எதுவும் சாப்பிடவில்லை என்றும், உறங்கவில்லை என்றும் சிறைத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆசியாவின் மிகப் பெரிய சிறையான திகாரில், 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் மொத்த சிறைக்குமே நேற்று இரவிலிருந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தங்கள் சிறை அறையிலிருந்த குற்றவாளிகள் சுமார், காலை 3:30 மணிக்கு எழுப்பப்பட்டனர். அப்போது உச்ச நீதிமன்றத்தில் தங்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்று அவர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் பவண், வினய் மற்றும் முகேஷ், சிறையில் பணி செய்ததற்கான ஊதியம் அவர்களின் குடும்பங்களிடம் கொடுக்கப்படும் என்று சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அக்ஷய் தாக்கூர் எந்த வேலையும் செய்யாததானால் அவருக்கு எந்த ஊதியமும் இல்லை. அவர்களின் அனைத்து உடைமைகளும் சம்பந்தப்பட்ட குடும்பங்களிடம் ஒப்படைக்கப்படும்.
குற்றவாளி வினய், கடந்த பிப்ரவரி மாதம் சிறை அறையில், தலையை முட்டி காயம் ஏற்படுத்திக் கொண்டார்.
இன்று காலை குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் அவர்களின் உடல்கள் தொங்கவிடப்பட்டன. அதைத் தொடர்ந்து மருத்துவர் ஒருவர், அவர்கள் இறந்ததாக அறிவித்தார்.
குற்றவாளிகளின் உடல்கள் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு 5 நபர்கள் கொண்டு குழு உடல்களுக்குப் பிரேதப் பரிசோதனை செய்யும். பின்னர் மதமுறைப்படி அவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படும்.