This Article is From Mar 21, 2020

தூக்கு தண்டனைக்கு முன் ‘தற்கொலை செய்வேன்’ என மிரட்டிய நிர்பயா குற்றவாளியின் மனைவி!

Nirbhaya Case: டெல்லி நீதிமன்றம், குற்றவாளிகளின் மனுவை தள்ளுபடி செய்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தை குற்றவாளிகள் தரப்பு அணுகியது.

தூக்கு தண்டனைக்கு முன் ‘தற்கொலை செய்வேன்’ என மிரட்டிய நிர்பயா குற்றவாளியின் மனைவி!

Nirbhaya Case: இன்று காலை சரியாக 5.30 மணிக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • இன்று காலை 5:30 மணிக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்
  • 2012 ஆம் ஆண்டு நிர்பயா, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்
  • பலாத்கார சம்பவத்திற்குப் பிறகு பரிதாபமாக உயிரிழந்தார் நிர்பயா
New Delhi:

Nirbhaya Case:

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளின் 4 பேரும் இன்று காலை தூக்கிலிடப்பட்டனர். ஆனால், கடைசி வரை தங்களின் தண்டனைக்கு எதிராக அவர்கள் போராடிய வண்ணமே இருந்தனர். நேற்று டெல்லி நீதிமன்றத்தில் தூக்கு தண்டனைக்கு எதிராகக் குற்றவாளிகள் மனுத் தாக்கல் செய்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்காத நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. வழக்கு விசாரணைக்கு முன்னர், குற்றவாளிகளில் ஒருவரின் மனைவி, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அச்சுறுத்தியுள்ளார். இது டெல்லி நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டிசம்பர் 16, 2012-ல், 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா, டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே தள்ளி விடப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் சிறுவர் ஆவார். அவர் 3 ஆண்டுகள் சிறார் காப்பகத்தில் தண்டனையை முடித்துக்கொண்டு வெளியேறினார். இன்னொரு குற்றவாளி நீதிமன்றத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ள, இன்று காலையில் மீதமுள்ள 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அக்‌ஷய் தாக்கூர் சிங், 31, பவண் குப்தா, 25, வினய் ஷர்மா, 26 மற்றும் முகேஷ் சிங், 32 ஆகிய 4 குற்றவாளிகள்தான், இன்று காலை 5:30 மணிக்குத் தூக்கிலிடப்பட்டனர். 

இதில் அக்‌ஷயின் மனைவிதான் புனிதா தேவி. அவர் தன் குழந்தையுடன் டெல்லி நீதிமன்றத்திற்கு நேற்று வந்திருந்தார். நீதிமன்ற வளாகத்தில் திடீரென்று மயக்கம் வந்து கீழே விழுந்தார் புனிதா தேவி. பின்னர் விழித்துக் கொண்டு, தன் செருப்பால் தன்னையே அடித்துக் கொண்டார். தொடர்ந்து அவர், “எனக்கு வாழ விருப்பமில்லை. நான் தற்கொலை செய்து கொள்வேன்” என்று கத்தி கூச்சலிட்டுள்ளார். 

புனிதா தேவி, சில நாட்களுக்கு முன்னர் பீகார் நீதிமன்றத்தில் தனக்கு அக்‌ஷயிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். மனுவில் அவர், “என் கணவரைத் தூக்கிலிட்ட பின்னர் நான் விதவையாக வாழ விரும்பவில்லை. என் கணவர் நிரபராதி. அவர் தூக்கிலிடும் முன்னர் முறைப்படி நான் விவாகரத்து வாங்க விரும்புகிறேன்,” எனக் குறிப்பிட்டிருந்தார். 

டெல்லி நீதிமன்றம், குற்றவாளிகளின் மனுவைத் தள்ளுபடி செய்ததை அடுத்து உச்ச நீதிமன்றத்தைக் குற்றவாளிகள் தரப்பு அணுகியது. அங்கும் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதையடுத்து இன்று காலை சரியாக 5.30 மணிக்குக் குற்றவாளிகளுக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

.