நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் 2 பேர் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, வினய் ஷர்மா மற்றும் முகேஷ் ஆகியோரின் மனுவை விசாரித்தது.
குற்றவாளிகளுக்கு டெல்லி நீதிமன்றம் மரண தண்டனை உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, நீதிமன்றங்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான கடைசி முயற்சியாக இந்த மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16-ம்தேதியன்று, மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட அவர், ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளி விடப்பட்டார். இந்த சம்பவத்தை 6 பேர் செய்தனர்.
மருத்துவமனையில் படு காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குற்றவாளிகளில் ஒருவர் சிறுவர் ஆவார். 18 வயதுக்கு உட்பட்ட அவர், சீர்திருத்தப் பள்ளியில் 3 ஆண்டுகள் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். மற்றொரு குற்றவாளி ராம் சிங், சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது மீதம் உள்ள 4 பேர் தூக்கு தண்டனையை எதிர்கொள்ளவுள்ளனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் மறு சீராய்வு மனுக்களை பலமுறை தொடர்ந்தனர். அவற்றை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதன்படி, ஜனவரி 22-ம்தேதி காலை 7 மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்பட உள்ளனர். குற்றவாளிகளான பவன் குப்தா, முகேஷ், வினய் சர்மா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேர் மரண தண்டனையை நிர்பயா வழக்கில் எதிர்கொள்ள உள்ளனர்.