This Article is From Jan 16, 2020

Nirbhaya Case: குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற புதிய தேதி?-திகார் சிறை சொல்லும் காரணம்

Nirbhaya Case: டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16 ஆம் தேதியன்று, மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

Nirbhaya Case: குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற புதிய தேதி?-திகார் சிறை சொல்லும் காரணம்

Nirbhaya Case: முகேஷ் சிங் உள்ளிட்ட 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஜனவரி 22-ம் தேதி நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

New Delhi:

நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு வரும் ஜனவரி 22 ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், டெல்லி அரசு, “ஜனவரி 22-ல் தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை,” என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. குற்றவாளிகளில் ஒருவர், இந்திய ஜனாதிபதிக்குக் கருணை மனு அனுப்பியதை மேற்கோள் காட்டி, தூக்குத் தண்டனையில் மாற்றம் அவசியம் என்று தெரிவித்திருந்தது டெல்லி அரசு. தற்போது, இதே காரணத்தைச் சொல்லியிருக்கும் திகார் சிறை நிர்வாகம், டெல்லி அரசிடம் தண்டனையை நிறைவேற்ற புதிய தேதியைக் தெரிவிக்குமாறு கேட்டுள்ளது. 

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் வரும் ஜன 22 ஆம் தேதி தூக்குத் தண்டனை பெற இருந்த நிலையில், அவர்களில் ஒருவரான முகேஷ் சிங் கருணை கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதினார். அந்த மனுவைக் காரணமாக சொல்லித்தான் தூக்குத் தண்டனையை தற்போதைக்கு நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று டெல்லி அரசும் மத்திய அரசும் தெரிவித்துள்ளன.

கருணை மனுவுக்கு முன்னர், உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, குற்றவாளிகள் வினய் ஷர்மா மற்றும் முகேஷ் ஆகியோர், தூக்குத் தண்டனை குறித்தான மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தனர். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, முகேஷ் சிங் தற்போது, குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். முகேஷ் சிங் உள்ளிட்ட 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஜனவரி 22-ம் தேதி நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் 16 ஆம் தேதியன்று, மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட அவர், ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளி விடப்பட்டார். இந்த சம்பவத்தை 6 பேர் செய்தனர். மருத்துவமனையில் படு காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி அந்த மாதமே உயிரிழந்தார். 

குற்றவாளிகளில் ஒருவர் சிறுவனாக இருந்தான். 18 வயதுக்கு உட்பட்ட அவன், சீர்திருத்தப் பள்ளியில் 3 ஆண்டுகள் அனுமதிக்கப்பட்டிருந்தான். பின்னர் அவன் விடுதலை செய்யப்பட்டான். மற்றொரு குற்றவாளி ராம் சிங், சிறைச்சாலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்போது மீதம் உள்ள 4 பேர் தூக்குத் தண்டனையை எதிர்கொள்ள உள்ளனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் மறு சீராய்வு மனுக்களை பலமுறை தொடர்ந்தனர். அவற்றை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.


 

.