This Article is From Jan 29, 2020

நிர்பயா வழக்கு: பிப்.1ம் தேதி குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் புதிய சிக்கல்!!

கடந்த மாதம், அக்ஷய் சிங் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

குற்றவாளிகளை தூக்கிலடப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து நிர்பயாவின் தாயார் கடுமையாக விமர்சித்திருந்தார்.

New Delhi:

நிர்பயா குற்றவாளிகள் வரும் பிப்.1ம் தேதி தூக்கிலடப்பட உள்ள நிலையில், நான்கு பேரில் ஒருவரான அக்ஷய் சிங் தனது மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். 

தூக்கிலடப்படுவதற்கு எதிராக குற்றவாளிகள் ஒவ்வொருவராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில், அக்ஷய் சிங் 3வது நபராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் நிர்பயா குற்றவாளிகள் இந்த வார இறுதியிலும் தூக்கிலடப்பட வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏற்கனவே, அக்ஷய் சிங் தனக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்நிலையில், இந்த மனுவை நீதிபதிகள் திறந்த நீதிமன்றத்தில் அல்லாமல், தங்களது அறைகளில் விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்ஷய் சிங்கின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், அவர் அடுத்து ஜனாதிபதியிடம் கருணை மனு அளிக்கும் வாய்ப்புள்ளது. 

இதனிடையே, முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் கடந்த 17ம் தேதி நிராகரித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. 

நிர்பயா வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். 2012-ல் அவர்கள் செய்த குற்றத்துக்காக இந்த தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. பிப்ரவரி 1-ம்தேதி தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வழக்கில் குற்றவாளியான ஒருவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னொருவர் சிறார் என்பதால் அவருக்கு 3 ஆண்டுகள் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். 

முன்னதாக, திகார் சிறை அதிகாரிகள் குடியரசு தலைவரிடம் அனுப்பப்பட்ட கருணை மனுவுக்கு போதிய ஆவணங்கள் ஏதும் அளிக்கவில்லை என்று கூறி குற்றவாளிகள் தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எதிர்த்தரப்பில் குற்றவாளிகள் யுக்திகளை கையாண்டு தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. 

மரண தண்டனை குற்றவாளிகள் இவ்வாறு தங்களுக்கு தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிப்போட, பல்வேறு யுக்திகளை கையாளுகிறார்கள் என்று கருதிய மத்திய அரசு இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியது. மரண தண்டனை கைதிகளின் தண்டனையை நிறைவேற்றுவது குறித்து நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

.