New Delhi: தலைநகர் புது டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் மருத்துவ மாணவி நிர்பயா. இந்த சம்பவத்தை அடுத்து அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். நிர்பயாவை பலாத்காரம் செய்தவர்களுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. குற்றம் சுமத்தப்பட்ட 4 பேரில் மூவர் மரண தண்டனையை குறைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.
தெரிந்துகொள்ள வேண்டியவை,
முகேஷ் (29), பவன் குப்தா (22), வினய் ஷர்மா (23) ஆகியோரின் மரண தண்டனை குறித்துத்தான் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கள உள்ளது.
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அசோக் பூஷன், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது.
4-வது குற்றவாளியான அக்ஷ்ய் குமார் சிங், மரண தண்டனையை எதிர்த்து வழக்கு தொடுக்கவில்லை.
அக்ஷயின் வழக்கறிஞர் ஏ.பி.சிங், ‘இதுவரை மரண தண்டனையை எதிர்த்து நாங்கள் மனுத் தாக்கல் செய்யவில்லை. சீக்கிரமே மனுத் தாக்கல் செய்வோம்’ என்றுள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம், டெல்லி நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனைத் தீர்ப்பு செல்லும் என்று உத்தரவிட்டது.
‘சட்டத்தின் பெயரால் செய்யப்படும் மாபெரும் குற்றம்’ என்று மரண தண்டனைக்கு மேல்முறையீடு செய்த மனுவில் 3 குற்றவாளிகளும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மேல்முறையீடு தொடர்பான வாதங்களை கடந்த மே மாதம் வரை உச்ச நீதிமன்றம் கேட்டது.
நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு கொல்லப்பட்டப் பிறகு, நாட்டின் பலாத்கார குற்றங்களுக்கான சட்டங்களே மாற்றியமைக்கப்பட்டன.
குற்றம் சுமத்தப்பட்ட 6 பேரில் ஒருவரான ராம் சிங், சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
இன்னொருவரான, சிறுவன் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் 3 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து ரிலீஸ் ஆகிவிட்டான்.
‘அனைத்துக் குற்றவாளிகளும் தூக்கிலடப்பட வேண்டும்’ என்று நிர்பயாவின் பெற்றோர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.