நிர்மல் சிங் அமிர்தசரஸ் பொற்கோயிலின் சிறந்த பாடகராக கடந்த காலங்களில் இருந்துள்ளார்
Amritsar: கொரோனா தொற்று காரணமாகப் பஞ்சாபைச் சேர்ந்த பத்ம ஸ்ரீ விருது பெற்ற 62 வயதான குர்பானி பாடகரான நிர்மல் சிங் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார். நிர்மல் சிங் அமிர்தசரஸ் பொற்கோயிலின் ராகி என்றழைக்கப்படும், பல்வேறு ராகங்களில் பக்தி உணர்வுடன் பாடும் திறமை கொண்ட சிறந்த பாடகராக கடந்த காலங்களில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த இவர், மூச்சுத் திணறல் மற்றும் தலைச் சுற்றல் காரணமாக அமிர்தசரஸில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவர் மரணமடைந்தார்.
முன்னதாக வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த நிர்மல் சிங், " மூச்சுக்குழாய் ஆஸ்துமா காரணமாக அவரது ஆபத்து காரணி அதிகரித்திருந்தது" என்று பஞ்சாப் பேரிடர் மேலாண்மை (COVID-19) சிறப்பு தலைமை செயலாளர் கே.பி.எஸ் சித்து கூறியிருந்தார்.
சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த நிர்மல் சிங் டெல்லி, சண்டிகர் மற்றும் வேறு சில இடங்களில் பெரிய மதக் கூட்டத்தை நடத்தியதாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து, மார்ச் 19 அன்று சண்டிகரில் உள்ள ஒரு வீட்டில் "கீர்த்தனையும்" நிகழ்த்தினார் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது இவருடன் இருந்த அவரது இரண்டு மகள்கள், மகன், மனைவி, ஒரு ஓட்டுநருடன் சேர்த்து 6 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
2009-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற நிர்மல் சிங், சீக்கிய புனித புத்தகமான குரு கிரந்த் சாஹிப்பின் குர்பானியில் உள்ள 31 ராகங்கள் அனைத்தையும் அறிந்தவர்.
இந்தியாவில் தற்போது 1,834 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 41 தொற்று காரணமாக இறந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.