முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- 10 மாதங்களாக நிர்மலா தேவி உட்பட மூவரும் சிறையில் உள்ளனர்
- நிர்மலா தேவி பலமுறை பிணை கேட்டு மனு தாக்கல் செய்தார்
- அவருக்கு தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு வருகிறது
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு, அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரியில் பயிலும் மாணவிகளை தவறான பாதையில் அழைத்ததாக கூறி பகீர் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஒரு ஆடியோவும் வெளியானது. அதில் நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்குத் தூண்டுவது பதிவாகியிருந்தது. அந்த போன் அழைப்பு ஆடியோவில், நிர்மலா தேவி, தற்போது தமிழக ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித் குறித்தும் பேசினார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
அதைத் தொடர்ந்து நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாக கூறி பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரையும் தமிழக காவல் துறை கைது செய்தது. திருவில்லிப்புத்தூரில் இருக்கும் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
முருகன் மற்றும் கருப்பசாமி சில மாதங்களுக்கு முன்னர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. பிணையில் உள்ள நாட்களில் முருகன் மற்றும் கருப்பசாமி வெளிநாடு செல்லவோ சாட்சிகளை கலைக்கவோ கூடாது என்றும் வழக்கு விசாரணை நடக்கும் நாட்களில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிணையில் வெளிவந்துள்ள முருகன், ‘என் மீது பதியப்பட்டிருப்பது பொய் வழக்கு' என்று கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக நிர்மலா தேவியை சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு வந்திருந்தபோது அவர் ஊடகங்களிடம் பேசக் கூடாது என்பதற்காக போலீஸாரால் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வழக்கு குறித்து இன்னும் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை என்று தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்படுகிறது.