This Article is From May 15, 2020

விவசாயத்துறை மேம்பாட்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு! மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு

விவசாயிகளுக்கு ரூ. 6,400 கோடி நிலுவைத்தொகை பீம யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் ரூ. 18,700 கோடி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளது. 

விவசாயத்துறை மேம்பாட்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு! மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு

3-வது நாளாக சிறப்பு திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

New Delhi:

விவசாயத்துறை மேம்பாட்டிற்காக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தற்சார்பு இந்தியா திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3-வது நாளாக இன்று அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது-

இந்தியாவில் பெரும்பாலானோர் விவசாயத்துறையை சார்ந்துதான் இருக்கின்றனர். அனைத்து சவாலான சூழல்களிலும் விவசாயிகள் சிறப்பாக செயல்படுகின்றனர். இன்று மொத்தம் 11 அறிவிப்புகள் வெளியிடப்படும். அவற்றில் 8 அறிவிப்புகள் விவசாயம் சார்ந்ததாக இருக்கும். விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் ஆகிய துறைகள் தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியிடப்படும்.  

கடந்த 2 மாதங்களாக விவசாயத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொது முடக்கத்தின்போது ரூ. 74,300 கோடி அளவுக்கு அடிப்படை ஆதார விலையில் விவசாய பொருட்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

பொது முடக்கத்தின்போது பாலின் தேவை 20 - 25 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டன. 

விவசாயிகளுக்கு ரூ. 6,400 கோடி நிலுவைத்தொகை பீம யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கிசான் திட்டத்தின் கீழ் ரூ. 18,700 கோடி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளது. 

விவசாய துறையில் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குளிர்பதன கிடங்குகள் இந்த தொகையின் மூலம் மேம்படுத்தப்படும். வேளாண் துறை, கூட்டுறவு வங்கிகள், வேளாண் உற்பத்தி நிறுவனங்கள், வேளாண் தொடக்க நிறுவனங்கள் இதனால் பலன் அடையும். இந்த 1 லட்சம் கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டு விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

போதுமான குளிர்பதன வசதி இல்லாததால் வேளாண் பொருட்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறுகிய கால பயிர்க் கடன் வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். 
 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

.