2-வது முறையாக பட்ஜெட் உரையாற்றியுள்ளார் நிர்மலா சீதாராமன்.
New Delhi: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 2 மணி நேரம் 41 நிமிடங்கள் பட்ஜெட் உரையை இன்று வாசித்தார். இரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக அவர் ஓய்வு எடுத்துக்கொண்டார்.
கடந்த முறை அவர் தொடர்ந்து 2 மணிநேரம் 17 நிமிடங்களாக பட்ஜெட் உரையை வாசித்திருந்தார். தற்போது அந்த சாதனையை நிதியமைச்சர் முறியடித்துள்ளார்.
இன்னும் 2 பக்கம் மட்டுமே மீதம் உள்ள நிலையில், அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இரத்த அழுத்தம் குறைந்தது. இதையடுத்து அவர் ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார்.
60 வயதாகும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து நின்றுகொண்டே பட்ஜெட் உரையை வாசித்தார். இடையே சர்க்கரையை எடுத்துக்கொண்ட அவர், நெற்றியில் வழிந்த வியர்வை துடைத்துக் கொண்டே பட்ஜெட் உரையை படித்தார்.
உடல்நிலை சற்று தளர்ந்தபோது, இன்னும் 2 பக்கங்கள்தான் மீதம் உள்ளன என்று மக்களவையில் கூறினார். இதன்பின்னர் அவரை உட்காருமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர். இரத்த அழுத்தம் குறைந்ததால் அவருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர், நிர்மலாவுக்கு தண்ணீர் வழங்கினார். அவரிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நலம் விசாரித்தார்.
நீண்ட நேரம் பட்ஜெட் உரையை வாசித்ததன் மூலம் தனது சொந்த சாதனையையே நிர்மலா சீதாராமன் முறியடித்துள்ளார். கடந்த ஆண்டு 2 மணிநேரம் 17 நிமிடங்கள் அவர் பட்ஜெட் உரையை படித்தார். இன்றைக்கு அவர் 2 மணி நேரம் 41 நிமிடங்கள் பட்ஜெட்டை வாசித்திருக்கிறார்.
அவரது உரையில் காஷ்மீர் கவிதைகள், ஆத்திச்சூடி, திருக்குறள் ஆகிய தமிழ் இலக்கியங்கள் இடம்பெற்றருந்தன.
முன்பு நிதியமைச்சராக ஜஸ்வந்த் சிங் இருந்தபோது, அவர் வாசித்த உரைதான் நீண்டதாக இருந்தது. அதனை 2 நிமிடங்கள் அதிகமாக வாசித்து நிர்மலா சீதாராமன் ஜஸ்வந்த் சிங்கின் சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த 2014-ல் அன்றைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வாசித்த பட்ஜெட் உரை 2 மணி நேரம் 10 நிமிடங்களாக இருந்தது.
1991-ல் மன்மோகன் சிங் வாசித்த பட்ஜெட் உரையும் நீண்டதாக இருந்தது. இன்றைய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்தள்ள அவர், பட்ஜெட் உரை மிகவும் நீளமாக உள்ளது என்றும், இன்னும் முழுமையாக அதனை உள்வாங்கவில்லை என்றும் கூறியுள்ளார்.