This Article is From Dec 06, 2019

'இணையதளத்தை உருவாக்குவதும் நாட்டை அமைப்பதும் ஒன்றல்ல' - நித்திக்கு மத்திய அரசு எச்சரிக்கை!!

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா கடந்த புதன்கிழமையன்று 'கைலாசா' என்ற புதிய நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

'இணையதளத்தை உருவாக்குவதும் நாட்டை அமைப்பதும் ஒன்றல்ல' - நித்திக்கு மத்திய அரசு எச்சரிக்கை!!

விசாரணையில் சிக்காமல் இருக்க நித்யானந்தா வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

New Delhi:

இணைய தளத்தை உருவாக்குவதும், நாட்டை அமைப்பதும் ஒன்றல்ல என்று நித்தியானந்தாவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கும் நித்தியானந்தாவுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடிப்படையில் நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர் புதிய விண்ணப்பம் அளித்திருந்தார். அதனையும் மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. 

வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்கும் நித்தியானந்தாவை பிடிப்பதற்காக வெளியுறவு அமைச்சகத்தின் அனைத்து பிரிவுகளும் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அதன் செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் தெரிவித்திருக்கிறார். 

அவரிடம் நித்தியானந்தா சொந்தமாக நாட்டை உருவாக்கியுள்ளார் என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'நாடு அமைப்பது ஒன்றும் இணையதளத்தை அமைப்பதைப் போன்றது அல்ல' என்று கண்டனம் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'நாங்கள் நித்தியானந்தாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்திருக்கிறோம். புதிய பாஸ்போர்ட்டுக்கு அவர் விண்ணப்பம் செய்திருந்தார். அதனையும் நிறுத்தி வைத்துள்ளோம். போலீஸ் ஒப்புதல் இன்றி அவரால், பாஸ்போர்ட் பெற முடியாது. நித்தியானந்தாவை பிடிப்பதற்காக நாங்கள் எங்களது அதிகாரிகளை முழு வீச்சில் களம் இறக்கியுள்ளோம். அவர் எங்கு இருக்கிறார் என்பதை எங்களால் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்காக வெளிநாடுகளின் உதவியை நாடியுள்ளோம். அவரைப் பிடிக்க காத்திருக்கிறோம்' என்று கூறினார். 

நித்தியானந்தா மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த புதன் அன்று அவர் கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்தார். அதற்கு அமைச்சரவையும், தங்க பாஸ்போர்ட்டுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

நித்தியானந்தாவுக்கு கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் உள்ளனர். கைலாசா நாடு குறித்த தனது அறிவிப்பை அவர் யூடியூப் சேனலில் தெரிவித்திருக்கிறார்.

41 வயதாகும் அவர், தான் உருவாக்கியிருக்கும் கைலாசா என்ற நாடு மிகப்பெரிய இந்து நாடு என்றும், அதற்கு எல்லைகள் இல்லை என்றும் கூறியுள்ளார். 

'இந்து நாட்டிற்கு எல்லையில்லை' என்று அவர் வீடியோவில் கூறியுள்ளது வைரலாகி வருகிறது. 

கைலாசா நாடு குறித்து அவர் உருவாக்கியிருக்கும் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. காவல் துறை மற்றும் பிற விசாரணை அமைப்புகளாலேயே அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து விவரம் ஏதும் இல்லை. 

கைலாசா இணைய தளத்தில் அந்த நாட்டின் பல்வேறு துறைகள், நிறுவனங்கள், உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகள், வர்த்தகம், தொழில், விட்டு வசதி துறை, டெக்னாலஜி உள்ளிட்டவை தொடர்பாக தகவல்கள் இடம்பெற்றுள்ளனர். 

மூவர்ணக் கொடி கைலாசா நாட்டிற்காக நித்தியானந்தாவால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகியவை முக்கிய மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

2010-ல் நித்தியானந்தாவுக்கும் பிரபல நடிகைக்கும் இடையே நடந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோ வெளியானது. அது முதற்கொண்டு அவர் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். அப்போது அவர் 53 நாட்கள் சிறையில் இருந்தார். 

இதன் தொடர்ச்சியாக சில பெண்கள் அவருக்கு எதிராக கர்நாடகத்தில் புகார் அளித்திருந்தனர். 

கடந்த மாதம் நித்தியானந்தாவுக்கு எதிராக குஜராத் மாநிலத்தில் குழந்தைகளை சட்டவிரோதமாக கடத்தி வைத்திருந்தார் என்ற புகார் அளிக்கப்பட்டிருந்தது. 

இந்த விசாரணையில் சிக்காமல் இருப்பதற்காக அவர் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார். 

தற்போது வரையில் அவர் இந்தியாவில் உள்ள ஆசிரமங்களில் அவர் கடந்த ஓராண்டாக இல்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நித்தியானந்தாவுக்கு இந்தியாவில் 10 முதல் 15 ஆசிரமங்கள் உள்ளதாகவும், முக்கிய ஆசிரமங்கள் தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

.