This Article is From Dec 04, 2019

’கைலாசா’ என்ற தனி இந்து நாட்டை உருவாக்கிய சர்ச்சை சாமியார் நித்தியானந்தா!

Nithyananda Country: இதுதொடர்பாக அந்த வலைதளத்தில், ’கைலாசா’ என்று அழைக்கப்படும் அந்த நாடு ஒரு பிரதமருடன் கூடிய அமைச்சரவையை கொண்டுள்ளதாகவும், அது இந்துக்களுக்கான ’இந்து இறையாண்மை தேசம்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’கைலாசா’ என்ற தனி இந்து நாட்டை உருவாக்கிய சர்ச்சை சாமியார் நித்தியானந்தா!

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நித்தியானந்தா ’கைலாசா’ என்ற தனி இந்து நாட்டை உருவாக்கியுள்ளார்.

New Delhi:

நித்தியானந்தா மீதும் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம், ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்ய குழந்தைகளை துன்புறுத்தியது போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, அவரை குஜராத் போலீசார் தேடி வந்தனர். 

இந்நிலையில், Kailaasa.org என்ற வலைதள பக்கத்தில் நித்தியனந்தா தனி நாட்டை உருவாக்கியுள்ளதாகவும், அதற்கான கொடி, சின்னம் மற்றும் அரசியலமைப்புகளையும் வடிவமைத்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக அந்த வலைதளத்தில், 'கைலாசா' என்று அழைக்கப்படும் அந்த நாடு ஒரு பிரதமருடன் கூடிய அமைச்சரவையை கொண்டுள்ளதாகவும், அது இந்துக்களுக்கான 'இந்து இறையாண்மை தேசம்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த நாட்டிற்கான நன்கொடைகளை கோரியுள்ள அந்த வலைதளம், நன்கொடை அளிப்பதன் மூலம் 'மாபெரும் இந்து நாட்டில்' குடியுரிமையை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது என்று தெரிவித்துள்ளதாக  ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சைபர் வல்லுநர்களின் கருத்துபடி, இந்த வலைதளமானது கடந்த அக்.21 2018ல் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், கடைசியாக அதில் அக.10 2019ல் தகவல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த வலைதளம் பானாமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் IP முகவரி அமெரிக்காவின் டால்லாஸ் பகுதியை காட்டுவதாகவும் தெரிவிக்கின்றனர். 

எனினும், இந்த 'கைலாசா' நாடு எங்கு அமைந்துள்ளது என்பது குறித்த சரியான தகவல்கள் எதுவும் அதில் இடம்பெறவில்லை. ஆனால், 'கைலாசா என்பது எல்லைகள் இல்லாத ஒரு நாடு, சொந்த நாடுகளில் இந்து மதத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உரிமையை இழந்த, உலகெங்கிலும் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களால் உருவாக்கப்பட்டது என்று அந்த வலைத்தளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த கைலாசா இயக்கமானது, அமெரிக்காவில் நிறுவப்பட்டது. இந்து ஆதி சைவ சிறுபான்மை சமூகத்தின் உறுப்பினர்களால் வழிநடத்தப்படுகிறது. இது இனம், பாலினம், பிரிவு, சாதி, அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல், உலகின் அனைத்து நடைமுறை, ஆர்வமுள்ள அல்லது துன்புறுத்தப்பட்ட இந்துக்களுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது. 

இங்கு அவர்கள் நிம்மதியாக வாழ முடியும் மற்றும் அவர்களின் ஆன்மீகம், கலைகள் மற்றும் கலாச்சாரத்தை மறுப்பு, குறுக்கீடு மற்றும் வன்முறை எதுவும் இல்லாமல் வெளிப்படுத்த முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த, இந்து தேசத்திற்கு 'ரிஷபா த்வாஜா' என்று அழைக்கப்படும் ஒரு கொடியும் உள்ளது. அதில் நித்யானந்தாவும், சிவபெருமானின் வாகனமான நந்தியுடன் சேர்ந்து இருக்கிறார்.

கைலாசா நாடானது, கல்வி, வர்த்தகம், கருவூலம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளையும் கொண்டிருக்க உள்ளது. ஆனால் என்னவென்றால், சனாதன இந்து தர்மத்தை புதுப்பிக்க உதவும் ஒரு 'அறிவொளி நாகரிகத் துறை' என்பதை வெளிப்படுத்துகிறது. 

மேலும், கைலாசா நாட்டிற்கென சொந்த பாஸ்போர்ட் உள்ளதாகவும், 'கைலாசா' குடிமகனாமக விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நித்தியானந்தா மீதும் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, பிடதி ஆசிரமத்தில் 2 நாட்கள் சோதனையும் நடத்தினர். 

இந்த குற்றச்சாட்டுகளுக்கு இடையே, நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுவிட்டதாக ஒரு தகவல் பரவி வந்தது. அவரை தாங்கள் தேடி வருவதாக அகமதாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். 

.