Nithyananda News: பாலியல் பலாத்காரம் மற்றும் ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளார் சர்ச்சை சாமியார் நித்யானந்தா.
New Delhi: Nithyananda News: பாலியல் பலாத்காரம் மற்றும் ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள சர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச போலீஸான இன்டர்போல், ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. குஜராத் காவல் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க, இன்டர்போல் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த ப்ளூ கார்னர் நோட்டீஸ் மூலம், இன்டர்போல், நித்யானந்தா இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க சர்வதேச உதவியைக் கேட்டுள்ளது. ஒரு பக்கம் இப்படி நித்யானந்தாவுக்கு எதிராக காய்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்க, மறுபக்கம் அவர் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அதில் அவர் பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து விளக்கி வருகிறார்.
முன்னதாக நித்யானந்தா, ஈக்வடார் நாட்டுக்குத் தப்பித்துச் சென்றுவிட்டதாக சந்தேகம் கிளப்பப்பட்டது. ஆனால் அந்தத் தகவலை மறுத்த அந்நாட்டு அரசு, நித்யானந்தாவுக்குத் தாங்கள் குடியுரிமை கொடுக்கவில்லை என்றும் அவர் ஹயிதி நாட்டுக்குத் தப்பித்திருக்கலாம் என்றும் விளக்கம் கொடுத்தது.
குஜராத்தின் அகமதாபாத்தில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா மீது, குழந்தைகளைக் கடத்தி தன் பிடியில் பலவந்தமாக வைத்திருந்தார் என்று புகார் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குத் தொடர்ந்து, அவர் குறித்த விசாரணையை ஆரம்பித்தது போலீஸ். கடந்த 2010 ஆம் ஆண்டு, பாலியல் பலாத்கார புகார் மற்றும் நடிகையுடன் ஆபாசமாக இருந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இமாச்சல பிரதேசத்தில் நித்யானந்தா கைது செய்யப்பட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் நித்யானந்தாவின் பாஸ்போர்ட்டை இந்திய அரசு ரத்து செய்தது. அவர் புதிய பாஸ்போர்டுக்கு விண்ணப்பித்ததும் நிராகரிக்கப்பட்டது. அவருக்கு மேலும் கிடுக்குப்பிடி போடும் வகையில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ரவீஷ் குமார், ‘நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்று கண்டறிய நமது அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்' என்று தகவல் தெரிவித்தார்.
சமீபத்தில் நித்யானந்தா வெளியிட்ட வீடியோவில், “என்னை யாரும் தொட முடியாது. நான் பரமசிவன். புரிகிறதா? உண்மையைக் கண்டறிய எந்த முட்டாள் நீதிமன்றமும் என்னை விசாரிக்க முடியாது. நான்தான் பரமசிவன்,” என்று பிரகடனப்படுத்தினார்.
அவர் மேலும், “இப்போது என்னிடம் நீங்கள் வந்துவிட்டதால், உங்களுக்கு நான் ஒரு சத்தியத்தைச் செய்கிறேன். இனி உங்களுக்கு இறப்பு என்பதே கிடையாது,” என்று பிதற்றினார்.
அவர் வெளியிட்ட வீடியோக்களிலேயே, கைலாசா என்னும் மிகப் பெரும் இந்து தேசத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்ததுதான் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது குறித்து ஒரு இணையதளமும் உருவாக்கப்பட்டு, அதில் கைலாசாவில் எப்படி குடியுரிமை பெறுவது உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரைத் தேடும் போலீஸ் உள்ளிட்ட விசாரணை அமைப்புகளுக்கு நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்று இன்று வரை தெரியவில்லை.
மதுரை ஆதீன மடத்தின் தலைமை பீடாதிபதியாக தன்னை சொல்லிக் கொள்கிறார் நித்யானந்தா.