Nithyananda News - "நான் யாருக்கும் எதிரானவன் அல்ல. பரமசவினின் அருளால், காலபைரவனின் பாதுகாப்பால் இந்த உலகிற்கு சேவையாற்றிக் கொண்டிருக்கிறேன்"
Nithyananda News - சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவை இந்திய அரசு தேடும் நபராக அறிவித்திருந்தாலும், அவர் ‘தலைமறைவாக' இல்லை என்பது, தினம் ஒரு வீடியோவை ரிலீஸ் செய்வதில் இருந்தே தெரிகிறது. ஒவ்வொரு முறை வீடியோ வெளியிடும்போதும், தன்னைப் பற்றி பேசப்படும் விஷயங்களுக்கு பதில் சொல்லும் வகையில் உரையாற்றுகிறார் நித்தியானந்தா. தற்போது அவர் திராவிடத்துக்கு எதிராக கடுமையாக பேசியுள்ளார்.
முன்னதாக தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளைப் பற்றி பேசுகையில், “வடிவேலு ஒரு படத்தில் பேசுவார். நீதிபதியிடம், ‘உங்களுக்குத் தெரியாத சட்டம் இல்லை. அதில் சிறந்த சட்டத்தை நீங்களே போட்டு விடுங்கள்' என்று. அதைப் போலத்தான், நீங்கள் ஐபிசி-யில் எந்தப் பிரிவை எடுத்துச் சொன்னாலும் அதில் என் மீது ஒரு வழக்கு இருக்கும். அனைத்தும் பொய் வழக்குகள், அவதூறு வழக்குகள்… எதற்கும் ஆதாரங்கள் கிடையாது,” என்று நக்கலாக சொன்னார்.
கைலாசா என்னும் தனி நாட்டை நித்தியானந்தா உருவாக்கியுள்ளதாகவும், அது இந்திய அரசுக்கு எதிராக செயல்படும் என்றும் பரபரப்பாக பேசப்படும் நிலையில், அது குறித்து விளக்கம் அளிக்கும் விதத்தில் இன்னொரு வீடியோவில் நித்தியானந்தா, “இந்தியா எனது தாய் நாடு. நான் எந்த நாட்டின் இறையாண்மைக்கும் எதிரானவன் அல்ல. எந்த நபருக்கும் எதிரானவன் அல்ல. எந்தக் கட்சிக்கும் எதிரானவன் அல்ல. நான் யாருக்கும் எதிரானவன் அல்ல. பரமசவினின் அருளால், காலபைரவனின் பாதுகாப்பால் இந்த உலகிற்கு சேவையாற்றிக் கொண்டிருக்கிறேன்,” என்று பேசினார்.
தற்போது திராவிட சித்தாந்தம் பற்றி கேலியாக பேசியுள்ள நித்தி, “சர்வதேச அளவில் நாத்திகம் என்கிற ஒரு கோட்பாடு இருக்கிறது. இந்த சர்வதேச நாத்திகத்தை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், அதில் ஒரு பொருள் இருக்கிறது. அதை ஒரு வாதத்திற்கு பயன்படுத்தும் வகையில் உட்கூறு உள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள நாத்திகத்துக்கு… திராவிட நாத்திகத்துக்கு அது அறவே இல்லை. சர்வதேச நாத்திகக் கோட்பாட்டுக்கும் திராவிட நாத்திகத்துக்கு ஒரு சம்பந்தமும் இல்லை…,” என்று கொதிப்புடன் பேசியுள்ளார்.
பாஜகவின் ஆதரவைப் பெறும் நோக்கிலேயே, திராவிட சித்தாந்ததிற்கு எதிராக நித்தியானந்தா இப்படி பேசியுள்ளார் என்று சலசலக்கப்படுகிறது. அது உண்மையா என்பது அடுத்தடுத்த வீடியோக்கள் மூலம் தெரிய வரலாம்.