New Delhi: கேரளாவில் பெய்த கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்புகளில் இருந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன.
இந்நிலையில், என்.டி டிவி சார்பில் #IndiaForKerala என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது. 6 மணி நேர தொடர் நேரலை நிகழ்ச்சியில் கேரள வெள்ள பாதிப்பிற்கு நிவாரணம் திரட்டப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய தொழிற்சங்க அமைச்சர் நித்தின் கட்காரி, கேரள மக்களுக்கு உதவி செய்வதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். “வேறு மாநிலத்திற்கு நேர்ந்த இயற்கை பேரிடர் என்று எண்ணாமல், நம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு என்று அனைவரும் எண்ண வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை மறுசீர் அமைக்கும் பணியில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் செயல்படும் என்று நித்தின் கட்காரி தெரிவித்தார்.
வெள்ள பாதிப்புகளில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்ப, 20,000 கோடி ரூபாய் தேவைப்படும் என்று கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் தெரிவித்திருந்தார். இதுவரையில், மத்திய அரசு சார்பில் 600 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.