மக்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கட்கரி கூறியுள்ளார்.
New Delhi: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சரிவர செயல்படாவிட்டால் அதற்கு அவர்கள் சார்ந்திருக்கும் கட்சி தலைவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இவர் முன்பு கட்சியின் தேசிய தலைவர் பொறுப்பை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக மத்திய பிரதேசம்,ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரசிடம் ஆட்சியை இழந்தது. இதனால் அக்கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் சற்று அதிருப்தியில் உள்ளனர்.
இந்த அதிருப்தியை கட்சி தலைவர்கள் சிலர் பொதுவெளியில் வெளிப்படுத்தி மற்ற கட்சி நிர்வாகிகளை மறைமுகமாக பேசி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தோல்விகளை ஏற்கும் பக்குவம் தலைமைக்கு இருக்க வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதின் கட்கரி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் முன்பு கட்கரி பேசியதாவது-
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெற்றிகளை கவனித்துப் பார்த்தால் அதற்கு, மிகவும் திறமையுடன் செயல்படும் அதிகாரிகள்தான் காரணமாக இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
பெரும்பாலான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேர்மையானவர்களாக இருக்கின்றனர். நான் ஒரு கட்சி தலைவராக இருக்கிறேன் என்றால், எனது கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சரியாக செயல்படாவிட்டால் அதற்கு நான்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு கட்கரி பேசினார்.
தொடர்ந்து அமித் ஷாவை நிதின் கட்கரி மறைமுகமாக பேசி வருகிறார். இதனால் கட்சிக்குள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிதின் கட்கரி ஏற்கனவே பாஜகவின் தேசிய தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.