5 லட்சம் விபத்துகளில் 1.50 லட்சம்பேர் உயிரிழப்பதாக நிதின் கட்கரி கூறுகிறார்.
Nagpur: ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் நடப்பதாகவும், இதில் சுமார் ஒன்றரை லட்சம்பேர் உயிரிழக்கின்றனர் என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தனது துறை சார்பாக பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், விபத்துக்களை குறைக்க முடியவில்லை என்று அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு வார நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். இந்த சாலைப் பாதுகாப்பு வாரம் இன்று தொடங்கி ஜனவரி 17-ம்தேதி வரையில் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, '5 லட்சம் சாலை விபத்துகள் இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கின்றன. இதில் 1.50 லட்சம்பேர் உயிரிழக்கிறார்கள். 2.50 லட்சம் முதல் 3 லட்சம்பேருக்கு காயம் ஏற்படுகிறது.
சாலை விபத்துகளால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் வரை பாதிக்கப்படுகிறது.
இதனை தவிர்த்து உயிரிழக்கும் நபர்களில் 18-35 வயதுள்ளவர்கள் 62 சதவீதமாக இருக்கின்றனர்.
விபத்துக்களை தடுக்க பல்வேறு கடும் நடவடிக்கைகளை சாலைப் போக்குவரத்து துறை மேற்கொள்கிறது. இருப்பினும், போதிய பலன் கிடைக்கவில்லை.
பாராட்டும் வகையில் தமிழ்நாட்டில் விபத்துகள் 29 சதவீத அளவுக்கு குறைந்துள்ளன. இவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளும் 30 சதவீதம் அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். போலீஸ், ஆர்.டி.ஓ., என்.ஜி.ஓ. நிறுவனங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் சாலை விபத்துகளை குறைக்க முடியும்' என்று தெரிவித்தார்.