This Article is From Jul 08, 2018

பாஜக-வுடன் கூட்டணி தொடருமா..?- நிதிஷ் குமார் சூசக பதில்

பாஜக-வுக்கும் ஐஜத-வுக்கும் தொடர்ந்து மோதல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது

பாஜக-வுடன் கூட்டணி தொடருமா..?- நிதிஷ் குமார் சூசக பதில்
Patna:

பிகாரில் பாஜக-வுடன் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு, அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், ‘2019 ஆம் ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு எவ்வளவு சீட் ஒதுக்கப்படுகிறதோ அதை வைத்தே பாஜக கூட்டணி முடிவு செய்யப்படும்’ என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளாராம்.

இன்று ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கியப் புள்ளிகள் சந்தித்து ஒரு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதையடுத்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘நாங்கள் பாஜக-வுக்கு ஆதரவாகவோ, உதவியாகவோ அல்லது எதிராகவோ இல்லை. அனைத்து மாநிலங்களிலும் ஐக்கிய ஜனதா தளம் தனித்துப் போட்டியிட முடியும். எங்கள் கட்சியின் கொள்கையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்’ என்று சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் சந்திப்பில், ‘நம்மை ஒதுக்க நினைப்பவர்கள் ஒதுக்கப்படுவார்கள்’ என்று நிதிஷ் குமார் கூறியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

பிகாரைப் பொறுத்தவரை நிதிஷ் குமார், மாநிலத்துக்கு சிறப்புப் பொருளாதார அந்தஸ்து மற்றும் அமைச்சரவையில் பதவி ஆகியவையை எதிர்பார்த்துள்ளார். ஆனால், இரண்டிலும் பாஜக இதுவரை குறிப்பிடத்தக்க முடிவை எடுக்காததால், நிதிஷ் கொதிப்பில் இருப்பதாக தெரிகிறது. இந்த அதிருப்தி குறித்து பாஜக-வுக்கும் ஐஜத கட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், பிகார் மாநில பாஜக தலைவர் ராஜேந்திர சிங், ‘இரு கட்சிக்கும் இடையில் எந்த வித பிளவும் இல்லை. இருப்பினும், பிகாரில் பாஜக தனித்துப் போட்டியிட்டால் கூட, மொத்தம் இருக்கும் 40 லோக்சபா சீட்களில் 75 சதவிகித இடங்களை கைப்பற்றும்’ என்றுள்ளார்.

பாஜக-வுக்கும் ஐஜத-வுக்கும் தொடர்ந்து மோதல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

.