சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் வழக்குகளில் முன்ஜாமீன் கோரி முத்தையா ஸ்தபதி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள், தொழிலதிபர்கள் ரன்வீர் ஷா, வேணு சீனிவாசன், கிரண் ராவ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பொன்மாணிக்கவேல், இன்னும் 4 நாட்களில் பணி ஓய்வு பெற உள்ள தனக்கு எதிராக விசாரணை நடந்து வருவதாகவும், ஓய்வு பெறுவதற்கு முன் தன்னை பழி வாங்கும் நோக்கில் பொய் வழக்குப்பதிவு செய்ய முயற்சிகள் நடந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், தன்னிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதாகவும் அவர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, இந்த விசாரணையின் முடிவில் நீதிபதிகள், நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.