Nagpur: பல ஸ்க்ரீன்கள் கொண்ட மல்டிபிளக்ஸ் சினிமா திரையரங்குகளில் வெளி உணவு எடுத்துச் செல்ல தடை விதிக்கக் கூடாது என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. மல்டிபிளக்ஸ் நிர்வாகம், மக்கள் வெளி உணவு எடுத்து வருவதைத் தடுத்தால் தண்டனைக்கு உள்ளாவர்கள் என்றும் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதுமே, மல்டிபிளக்ஸ்களில் விற்கப்படும் உணவு பொருட்கள், எம்.ஆர்.பி விலையை விட பன்மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களாக பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இது தொடர்பாக மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா என்ற அமைப்பு, ‘மல்டிபிளக்ஸ் உணவு பொருட்களின் விலையை அரசு முறைபடுத்த வேண்டும்’ என்று கோரி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தன. இதற்கு பொது மக்கள் மத்தியிலும் நெட்டிசன்கள் மத்தியிலும் ஆதரவு பெருகியதை அடுத்து, மகாராஷ்டிரா சட்டமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.
இது தொடர்பாக பாம்பே உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், ‘மகாராஷ்டிரா அரசு, மல்டிபிளக்ஸ்களில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலையே ஏன் முறைபடுத்தக் கூடாது. இது தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தான் மகராஷ்டிரா அரசின் உணவுத் துறை அமைச்சர் ரவிந்திர சவான், ‘மல்டிபிளக்ஸ் செல்லும் பொது மக்கள் வெளி உணவை எடுத்துச் செல்ல எந்தத் தடையும் விதிக்கப்படக் கூடாது. மக்கள் வெளி உணவு எடுத்து வருவதைத் தடுத்தால், சம்பந்தப்பட்ட மல்டிபிளக்ஸ் நிர்வாகம் தண்டனைக்கு உள்ளாவர்கள்’ என்று எச்சரித்துள்ளார்.
இந்த மொத்த விஷயம் குறித்து மகாராஷ்டிரா சினிமா முதலாளிகள் சங்கத்தின் தலைவர் நிதின் தாட்டர், ‘மல்டிபிளக்ஸ்களில் உணவு பொருட்களின் விலையை நிர்ணயிப்பதில் குழப்பம் நிலவி வருகிறது. அதில் ஒழுங்குமுறை கொண்டு வந்தால் கண்டிப்பாக பின்பற்றுவோம். உணவு பொருட்களின் விலை பல இடங்களில் வெவ்வேறு அளவில் விற்கப்படுகிறது. சினிமா தியேட்டர்களில் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் விலை ஒழுங்குபடுத்துதல் இருக்க வேண்டும்’ என்று கருத்து கூறியுள்ளார்.