கடனை வசூலிப்பதற்கு எந்த முறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி தனிவிதிமுறைகளை வகுத்து வங்கிகளுக்கு அளித்துள்ளது
New Delhi: வங்கியில் வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனை குண்டர்களை கொண்டு வசூலிக்க வங்கிகளுக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது என்று மத்திய அரசு மக்களவையில் விளக்கம் அளித்துள்ளது.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஒரு வங்கியின் வாடிக்கையாளர், அந்த வங்கியில் கடன் பெற்று இருந்தால், அவரிடம் கடனை குண்டர்களை நியமித்து வலுக்கட்டாயமாக வசூலிக்க வங்கிக்கு எந்தவிதமான அதிகாரங்களும் இல்லை. கடனை வசூலிப்பதற்கு எந்த முறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி தனிவிதிமுறைகளை வகுத்து வங்கிகளுக்கு அளித்துள்ளது. இந்த விதிமுறைகளைத்தான் அனைத்து வங்கிகளும் பின்பற்ற வேண்டும். கடன் மீட்பு நிறுவனங்கள் அல்லது முகவர்கள் தனியாக இருக்கின்றன. அவர்கள் முறைப்படி போலீஸார் ஆய்வு மூலம் விசாரணைகள் மூல கடனை வசூலிக்கலாம்.
கடன் பெற்றவர்களிடம் இருந்து கடனை வசூலிப்பதற்காக தொடர்ந்து துன்பப்படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. நாகரீகம் இன்றி கண்ணியம் அற்ற முறையில், கடன் பெற்றவர்களிடம் இரவு நேரத்தில் அதிகாலை நேரத்தில் கடனை கேட்டு குண்டர்கள் மூலம் தொந்தரவு செய்யக்கூடாது.
ரிசர்வ் வங்கியின் நடைமுறைகளை மீறினால் வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கலாம். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் புகார் அளித்தால் வங்கியின் மீது கடன் மீட்பு நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.