DMK's Kolam Protest - குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றுக்கு எதிப்புப் தெரிவிக்கும் வகையில் தமிழக எதிர்க்கட்சியான திமுக, புதிய பிரசார யுக்தியை கையிலெடுத்துள்ளது. தங்களது வீட்டில் “NO CAA, NO NRC” என்ற வாசகங்கள் கொண்ட கோலங்களைப் போட்டு திமுகவினர் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று, சென்னை, பெசன்ட் நகரில், குடியுரிமைச் சட்டம் மற்றும் என்ஆர்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிலர், கோலங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அவர்கள் முறையாக அனுமதி பெறாமல் இந்த செயலை செய்திருப்பதாக குற்றம் சாட்டிய தமிழக அரசு, 6 பேர் மீது வழக்குத் தொடர்ந்தது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்துதான், இன்று ‘கோலம் போட்டு' பிரசாரம் செய்யும் யுக்தியைத் திமுக பின்பற்றியுள்ளது.
இன்று காலை மு.க.ஸ்டாலினின் வீடு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் வீடுகளில் போடப்பட்டிருந்த ‘சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்புக் கோலங்கள்' வைரலாகின.
கனிமொழியும் இது குறித்து தொண்டர்களுக்கு கோரிக்கை விடுக்கையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கழக மகளிர் அணியினர் தங்கள் வீட்டு வாசலில் NO CAA, NO NRC என்ற வாசகங்கள் அடங்கிய கோலம் போட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,” என்று கூறியிருந்தார்.