அச்சப்பட வேண்டாம். தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று மோடி அறிவுறுத்தியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- கொரோனா குறித்து மக்கள் அச்சப்படத்தேவையில்லை என்கிறார் மோடி
- இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது
- உலக சுகாதார அமைப்பு கொரோனா பாதிப்பை தொற்று நோய் என அறிவித்துள்ளது.
New Delhi: கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் யாரும் வெளிநாட்டிற்குச் செல்ல மாட்டார்கள் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-
யாரும் அச்சப்பட வேண்டாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்ளுங்கள். இனி வரும் நாட்களில் மத்திய அமைச்சர்கள் யாரும் வெளிநாடுகளுக்குச் செல்ல மாட்டார்கள். தேவையற்ற வெளிநாட்டுப் பயணத்தைத் தவிர்க்குமாறு இந்திய மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். கூட்டமாகக் கூடுவதைத் தவிர்ப்பதன் மூலம் கொரோனா பரவுவதை நம்மால் தடுக்க முடியும்.
கொரோனா பரவுதல் குறித்து மத்திய அரசு விழிப்புடன் கண்காணித்து வருகிறது. அனைத்து மத்திய அமைச்சகங்களும், மாநில அரசுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
இவ்வாறு மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73- ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகக் கேரளாவில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா விசாக்களை ஏப்ரல் 15-ம்தேதி வரையில் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
வைரஸ் அதிகம் தாக்கிய 7 நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் கட்டாய மருத்துவச் சிகிச்சை முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். தூதரக விவகாரம், ஐ.நா., வேலை வாய்ப்பு, திட்டங்கள் செயலாக்கம் உள்ளிட்டவற்றைத் தவிர்த்து மற்ற விஷயங்களுக்கு தற்போதைக்கு விசா இல்லையென மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை தொற்று நோய் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கொரோனாவால் இந்தியாவின் அண்டை நாடான சீனாதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் இத்தாலி, ஈரான், ஸ்பெய்ன் நாடுகள் உள்ளன.
நேற்று அரசு வெளியிட்ட அறிக்கையில், 'சீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பெய்ன், ஜெர்மனி நாடுகளிலிருந்து பிப்ரவரி 15-க்கு பின்னர் வந்தவர்கள் கட்டாய மருத்துவ முகாம்களில் 14 நாட்கள் தங்க வைக்கப்படுவார்கள்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 4 நாட்களில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. இதற்கு இந்தியர்கள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வந்ததுதான் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.