“தமிழகத்தில் தாமரை மலராது என்று தெரிந்தும், அவர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்"
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது திருமா, தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், “தமிழிசை அவர்கள், திமுக கூட்டணி வெற்றி பெற்றாலும் நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமாக எதையும் செய்ய மாட்டார்கள். வேண்டுமென்றால் வெளிநடப்பு செய்வார்கள் என சொல்லியிருக்கிறார்” எனக் கேட்டதற்கு,
திருமா, “தமிழகத்தில் தாமரை மலராது என்று தெரிந்தும், அவர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். தற்போது படுதோல்வியும் அடைந்துவிட்டனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை குளம் குட்டைகளில் வேண்டுமென்றால் தாமரை மலரலாம். ஒரு போதும் தமிழக நிலத்தில் தாமரை மலரவே மலராது. தோல்வியடைந்துள்ள மன வருத்தத்தால் தமிழிசை இப்படியெல்லாம் பிதற்றி வருகிறார்” என்று கேலியாக பேசினார்.
தொடர்ந்து இன்னொரு நிருபர், “அன்புமணி ராமதாஸ் அடைந்த தோல்வி பற்றி” என்றதற்கு, (அசட்டையாக சிரித்துவிட்டு) “அது குறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை” என்று முடித்துக் கொண்டார்.