நெகிழிகளை முற்றிலுமாக ஒழித்துவிட்டதாக ஆளுநர் தெரிவித்திருக்கும் நிலையில், உண்மையில் நடப்பது என்ன என்பது எல்லாருக்கும் தெரியும்.
ஆக்கபூர்வமான அறிவிப்புகள் எதுவும் இல்லாத மக்களுக்கு எந்தப் பயனும் தராத அறிவிப்புகளின் தொகுப்பாக ஆளுநரின் உரை அமைந்திருக்கிறது என அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி ஆளுநர் உரையை தொடங்கினார்.
இந்நிலையில் ஆளுநர் பேசிக்கொண்டிருக்கும் போதே உரையை புறக்கணித்து திமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமமுகவின் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ஆக்கபூர்வமான அறிவிப்புகள் எதுவும் இல்லாத மக்களுக்கு எந்தப் பயனும் தராத அறிவிப்புகளின் தொகுப்பாக ஆளுநரின் உரை அமைந்திருக்கிறது. சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய ஆளுநர், தமிழக மக்களை வாட்டி வதைத்து வரும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அறிவிப்புகளை வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது.
கடந்த ஆண்டு இதே அவையில் உரையாற்றியபோது ஆளுநர் வெளியிட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவை காகிதத்தில் மட்டுமே இருக்கின்றன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டதாக கடந்த ஆண்டு ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்ட 2335.48 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் என்ன ஆயின என்பது பற்றிய எந்த விவரங்களும் தற்போதைய உரையில் இடம் பெறவில்லை.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தருவதாக ஆளுநர் உரையில் கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட வாக்குறுதி காற்றோடு கரைந்து போய்விட்டது. இன்னும் அந்தப் பகுதிகளில் முழுமையான மறு சீரமைப்புத் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய ரூ.400 கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகையைப் பெற்றுத் தருவது பற்றிய எந்தத் தெளிவான அறிவிப்பும் இல்லை.
அனைவரையும் படிக்க வைக்கவேண்டும் என்ற அக்கறையோடு செயல்படவேண்டிய அரசு அதனை மறந்துவிட்டு அரசுப் பள்ளிக்கூடங்களுக்கு படிப்படியாக மூடு விழா நடத்திக்கொண்டிருக்கிறது. அதன் விளைவாக அதிகரிக்கும் இடைநிற்றல்களால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு புதிய திட்டத்தைச் செயல்படுத்தவிருப்பதாக ஆளுநர் உரையில் கூறியிருப்பது மிகப்பெரிய நகை முரணாகும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட நெகிழிகளை முற்றிலுமாக ஒழித்துவிட்டதாக ஆளுநர் தெரிவித்திருக்கும் நிலையில், உண்மையில் நடப்பது என்ன என்பது எல்லாருக்கும் தெரியும்.
மேலும், மக்களை மத ரீதியாகப் பிளவுப்படுத்தும் குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடியுரிமைப் பதிவேடு போன்ற மக்களின் உணர்வு மற்றும் உரிமை தொடர்பான பிரச்சினைகளில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி எதுவும் ஆளுநர் உரையில் இல்லை. ஏழு தமிழர் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு பதிலேதும் சொல்லாமல் அதனைக் கிடப்பில் போட்டுவிட்டது பற்றி ஆளுநர் உரையில் எதுவுமே தெரிவிக்கப்படாததும் வருத்தமளிக்கிறது.
மொத்தத்தில், ஆக்கபூர்வமான அறிவிப்புகள் எதுவுமின்றி எல்லாவற்றையும் பூசி மெழுகி பெயரளவுக்கு ஓர் உரையை ஆளுநர் ஆற்றியிருக்கிறார் என்பதுதான் உண்மை" என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.