சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு இல்லையென உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தெரிவித்துள்ளது.
சூர்யாவின் கருத்தில் நீதிமன்ற அவமதிப்புக்கு முகாந்திரம் இருப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எஸ்.எம்.சுப்பிரமணியம் எழுதியிருந்த கடிதத்தினை தலைமை நீதிமன்ற அமர்வு இன்று நிராகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு பயந்து நீதிமன்றம் காணொளி வாயிலாக விசாரணையை மேற்கொண்டிருக்கக்கூடிய நிலையில், மாணவர்களை மட்டும் நேரில் சென்று தேர்வெழுத சொல்லுவது எவ்வாறு நியாயமாக இருக்க முடியும் என சூர்யா நீட் தேர்வுக்கு எதிரான தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
சூர்யாவின் இந்த அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென கோரிக்கை எழுந்திருந்தது. இந்நிலையில் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியமில்லையென சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஆறு பேர் சூர்யாவுக்கு ஆதரவாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இக்கடிதத்தில், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்தின் கருத்தினை கணக்கில் கொள்ள வேண்டாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.