புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தானுடனான உறவு முறிந்தது.
New Delhi: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவு பெற வழிவகுக்கும் என்றால், இந்திய விமானியை விடுவிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மோதல் முடிவு பெற வழிவகுக்கும் என்றால், இந்திய விமானியை ஒப்படைக்க தயாராக உள்ளோம் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தகவல் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் பிடியில் இருக்கும் இந்திய விமானியை திருப்பியனுப்ப எந்த உடன்படிக்கையும் இல்லை என்றும் இந்தியா அவரை உடனடியாக திரும்பி அனுப்ப வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் தூதரகத்தை அணுகாது என்றும் இந்திய விமானியை உடனடியாக திரும்ப பெற இந்தியா விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு காரணம் கிடைத்ததாக பாகிஸ்தான் நினைத்தால் அது நடக்காது.
பாகஸ்தான் வசம் உள்ள இந்திய விமானியை மீட்க இந்தியா அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக நேற்று பாகிஸ்தான் எப்-16 விமானப்படை விமானம் ஒன்று எல்லையில் அத்துமீறிய போது, இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு பதில் தாக்குதல் நடத்த இந்தியாவின் மிக்-21 ரக விமானம் சென்றிருந்த போது, அது பாகிஸ்தான் பிடியில் சிக்கியது. இதில் அந்த விமானத்தை இயக்கிய விமானியும் பாகிஸ்தான் பிடியில் சிக்கினார்.