சிலை கடத்தல் குறித்து நிலுவையில் இருக்கும் அனைத்து வழக்குகளையும் சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. ஆனால், இந்த உத்தரவு ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம். இந்நிலையில், வழக்குகளை விசாரிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சிபிஐ, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது குறித்தான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பு, தமிழக அரசின் உத்தரவு குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில், சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்ப அனுமதி கேட்கப்பட்டது. ‘சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களை பிரதமருக்கு அனுப்ப நினைக்கிறோம். அதற்கு அனுமதி கொடுக்கப்பட வேண்டும்’ என்று கோரியது.
அதற்கு நீதிமன்றம், ‘அதற்கு இப்போது அனுமதி கொடுக்க முடியாது. சிபிஐ என்ன முடிவு எடுக்கிறது என்பதைப் பார்த்து தான் அனுமதி கொடுப்போம். அரசாணை தொடர்பான ஆணையை இன்னும் தமிழக அரசு சமர்பிக்கவில்லை. அதை சீக்கிரமே சமர்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)