குடியுரிமைச் சட்ட திருத்தம் என்று அழைக்கப்படும் CAA கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
New Delhi: 'NRC' எனப்படும் தேசிய மக்கள் பதிவேடு குறித்த பணிகளை நாடு முழுவதும் தொடங்க எந்த ஒரு திட்டமும் தற்போது இல்லை என்று நாடாளுமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை மத்திய அமைச்சர் நித்தியானந்த ராய் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடந்த கூட்டத்தொடரின்போதும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த இந்த NRC குறித்து எந்தத் தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமைச் சட்ட திருத்தம் என்று அழைக்கப்படும் CAA கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அன்று தொடங்கி இந்த CAA-வை எதிர்த்து, நாடு முழுவதும் பலர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்றளவும் இந்தப் போராட்டங்கள் நீடிக்கின்றன.
ஆனால் CAA, மத துன்புறுத்தல் காரணமாக மூன்று முஸ்லீம் ஆதிக்கம் அதிகம் கொண்ட நாடுகளில் இருந்து இந்தியா வந்த சிறுபான்மையினருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இந்த CAA முஸ்லிம்களுக்கு பாகுபாடு காண்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கொள்கைகளை மீறுவதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி, இது குறித்து முன்னர் பேசுகையில், நாட்டில் NRC பற்றி தற்போது எந்த விவாதமும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் அவர், இது குறித்து 130 கோடி மக்களுக்கும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து NRC குறித்து எதுவும் பேசவில்லை என்றும், உச்சநீதிமன்றம் அறிவித்த பின்னரே அது அசாமில் முன்னோட்டமாக செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.