செப்டம்பர் மாதத்திலிருந்து சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
New Delhi: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் புதிய திருப்பமாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை கஸ்டடிக்கு செல்வாரா என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக டெல்லி நீதிமன்றம் நாளை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பிக்க உள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 15 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை தாங்களும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையினர் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதுதொடர்பான விவாதங்கள் நீதிமன்றத்தில் கார சாரமாக நடைபெற்றன. சிதம்பரம் தரப்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் நேரில் ஆஜராகி வாதாடினார்.
'சிதம்பரத்தை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறையினர் உரிமை கோர முடியாது. ஏனென்றால் அமலாக்கத்துறையின் அதே குற்றச்சாட்டுக்குத்தான் சிதம்பரம் சிபிஐ கஸ்டடியில் 15 நாட்கள் இருந்தார்' என்று வாதிட்டார்.
அமலாக்கத்துறை தரப்பில் அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடினார். அவர், பண மோசடி என்பது இன்னொரு குற்றச்சாட்டு என்று குறிப்பிட்டார். எனவே அந்த புகாரின் பேரில் சிதம்பரத்தை கஸ்டடியில் எடுத்து விசாரிப்பது அவசியமாகிறது என வலியுறுத்தினார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் உத்தரவை நாளைக்கு ஒத்தி வைப்பதாக கூறினார். இதனால், அமலாக்கத்துறை கஸ்டடிக்கு சிதம்பரம் செல்வாரா மட்டாரா என்பது நாளை தெரிந்து விடும்.