ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் விமான சேவைகளில் சில கட்டுப்பாடுகள் நீடிக்கும்.
நாட்டில் ஊரடங்குக்கு பின்னர் விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த சுமார் 40 நாட்கள் தொடர் ஊரடங்கு இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மே 3-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு பின்னர் செயல்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது-
ஊரடங்குக்கு பின்னர் விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. நேரம் வரும்போது இதுதொடர்பான முக்கிய அறிவிப்புவெளியாகும்.
கொரோனா பரவல் காரணமாக செய்தியாளர்கள் சந்திப்பு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே நடைபெறும். 2 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை மற்றும் அமைச்சரவை கூட்ட தகவல்கள் வெளியிடப்படும்.
இவ்வாறுஅவர் கூறினார். முன்னதாக கடந்த திங்களன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 'கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர், விமான பயணத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.' என்று தெரிவித்திருந்தார்.
ஊரடங்கு உத்தரவால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாக விமானப் போக்குவரத்து இருக்கிறது. இதனை நடத்தும் நிறுவனங்கள் கடுமையான நிதிச்சுமையில் தள்ளாடி வருகின்றன. அரசு உதவிக் கரம் நீட்டாவிட்டால் இழுத்து மூடும் நிலைமைக்கு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.