New Delhi: முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மாவுக்கு எதிரான புகார்களை விசாரிக்க மத்திய புலனாய்வு ஆணையமான சிவிசி-யால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி, ‘வெர்மா லஞ்சம் வாங்கியதாக சொல்லப்பட்டப் புகாரில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை' என்று NDTV-யிடம் தெரிவித்துள்ளார்.
சிவிசி அமைப்பால் முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக்தான், அலோக் வெர்மாவுக்கு எதிரான புகார்களை விசாரிக்க நியமிக்கப்பட்டார். அவர் நம்மிடம் மேலும் பேசுகையில், ‘வெர்மா விஷயத்தில் பிரதமர் மோடி அமைத்த குழுவின் நடவடிக்கை சரியான முடிவல்ல' என்றும் கூறியுள்ளார்.
சிபிஐ-யின் சிறப்பு அதிகாரியாக இருந்த ராகேஷ் அஸ்தனா கொடுத்த புகாரின் பேரில், வெர்மாவுக்கு எதிராக விசாரணை செய்யப்பட்டது. இந்த விவகாரம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வெர்மாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து அவர் சிபிஐ இயக்குநராக மீண்டும் பதவியேற்றார். ஆனால் அவரை பிரதமர் மோடி அமைத்த குழு, இயக்குநர் பதவியிலிருந்து நீக்கியது. மேலும் அவரை, தீயணைப்புத் துறை இயக்குநர் ஜெனரலாக பணி மாற்றம் செய்தது. இந்த பணி மாற்றத்தை ஏற்காத வெர்மா, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா கடிதத்தில் வெர்மா, ‘நான் என்னுள் கொண்டிருந்த மாண்புதான் கடந்த 40 ஆண்டு காலமாக பொதுச் சேவையில் என்னை ஈடுபடுத்தியது' என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடி அமைத்தக் குழுவில் அவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரன்ஞன் கோகாயின் பிரதிநிதியான நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில் கார்கே, வெர்மாவின் பணி மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால் பிரதமர் மோடி மற்றும் நீதிபதி சிக்ரி, வெர்மாவை நீக்க சம்மதம் தெரிவித்தனர். அதனால், அவரின் பதவி பறிக்கப்பட்டது.