This Article is From May 15, 2019

எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது; கமல் பேச்சுக்கு மோடி பதில்!

ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என கமல்ஹாசன் பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார்.

எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது; கமல் பேச்சுக்கு மோடி பதில்!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிறன்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், நமது நாட்டு தேசியக்கொடியில் உள்ள மூன்று நிறங்களும் பல்வேறு நம்பிக்கைகளை குறிக்கின்றன.

இந்த சமநிலையால் பெருமைப்படும் இந்தியர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன். இந்த மூன்று நிறங்களும் சரியாக இருக்க வேண்டும். அதனால் இங்குள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் விருப்பமாக இருக்க வேண்டும்.

முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார்.

கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில், அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி கமல்ஹாசன் பேச்சுக்கு பதில் தெரிவித்துள்ளார்.

அதில், எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்றும் அப்படி இருந்தால் அவர் இந்து அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை.

மேலும், எந்தவொரு பயங்கரவாதியும் இந்து மதத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது என்றும் மோடி கருத்து தெரிவித்தள்ளார்.
 

.