குடியரசு தலைவர் மாளிகையின் எழில்மிகு தோற்றம்.
ஹைலைட்ஸ்
- கொரோனா முன்னெச்சரிக்கையாக கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
- இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
- சில நாட்களுக்கு முன்பாக வேகம் குறைந்த கொரோனா தற்போது தீவிரம் அடைந்துள்ளது
New Delhi: கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் ஹோலி கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார்.
பாரம்பரியமாக ஹோலி கொண்டாட்டங்கள் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும். ஆனால் இந்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மார்ச் 10-ம்தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
கொரோனா வைரஸால் உலகளவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்திருக்கிறது. இந்த சூழலில் குடியரசு தலைவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாம் ஒவ்வொருவரும் உதவ வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியரசு தலைவர் மாளிகையில் ஹோலி கொண்டாட்டங்கள் நடைபெறாது என்று தெரிவித்துள்ளார்.
வண்ணங்களை ஒருவர் மீது ஒருவர் பூசி ஹோலி கொண்டாடப்படும். இதில் ஒருவரையொருவர் தொட நேரிடும். கொரோனா வைரஸ் என்பது தொடுதல் மூலமாக எளிதாக பரவும். இதன் காரணமாக ஹோலி கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கு வந்த இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் 15 பேருக்கும், அவருடன் பயணித்த இந்தியர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது நாட்டில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
சீனாவின் உஹான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ், தற்போது 60-க்கும் அதிகமான நாடுகளில் 90 ஆயிரம்பேரை பாதித்துள்ளது.
முன்னெச்சரிக்கையாக இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கடந்த 2 மாதங்களில் 6 லட்சம் பேரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தடுப்பு நடவடிக்கையாக அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், பாதுகாப்பான முறையில் தும்மவும், இருமவும் வேண்டும், கூடுமானவரை முகமூடி அணிந்திருக்க வேண்டும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ப மருத்துவர்கள் கூறும் அறிவுரையாகும்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மே மாதத்திற்குள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து சந்தைக்கு வரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.