அன்னை சோனியா காந்தியுடன் சந்திப்பில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, கடிதம் எழுதியவர்கள் மீது கடுகடுத்துள்ளார் எனப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- நேற்று காங்கிரஸ் காரிய கமிட்டி சந்திப்பு நடந்தது
- சுமார் 7 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது
- சந்திப்பின் முடவில் சோனியாவே தலைவராக தொடர்வான் என முடிவெடுக்கப்பட்டது
காங்கிரஸ் தலைமை குறித்தும் கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்தக் கடிதம் ஊடகங்களில் கசிந்த நிலையில், நேற்று அது குறித்து விவாதிக்க காங்கிரஸின் காரிய கமிட்டி சந்திப்பு நடத்தப்பட்டது. இந்த சந்திப்பில் கட்சித் தலைமைக்கு எதிராக கடிதம் எழுதியவர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சந்திப்பின் முடிவில் தற்போதைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தொடர்வார் என்று முடிவெடுக்கப்பட்டது. சந்திப்பின் இறுதியில் சோனியா, “நான் இந்த நடவடிக்கையால் காயமுற்றுள்ளேன். ஆனால், எதிர்த்தவர்கள் என் நண்பர்கள். எது நடந்ததோ, அது நடந்ததாகவே இருக்கட்டும். இனி நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணி செய்வோம். எனக்கு, எதிர்த்தவர்கள் மீது எந்தக் கோபமும் இல்லை” என்று பேசியுள்ளார்.
நேற்றைய சந்திப்பில் நடந்தவை குறித்தான முக்கிய 10 தகவல்கள்:
1.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காரிய கமிட்டி சந்திப்பின்போது, இன்னும் ஆறு மாதத்தில் அனைத்திந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி சந்தித்துப் புதிய தலைவர் குறித்த முடிவை எடுக்கும் வரை சோனியா காந்தியே தலைவராக தொடர வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரு வேளை சோனியாவால் தலைவராக தொடர முடியாத பட்சத்தில் ராகுல் காந்தி, தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று கூறப்பட்டது. சென்ற ஆண்டு தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் விலகியது குறிப்பிடத்தக்கது.
2.காரிய கமிட்டியின் தீர்மானத்தில், “சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் கரங்களை எந்த வகையிலும் வலுப்படுத்த காங்கிரஸ் காரிய கமிட்டி உறுதிபூண்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டது. தீர்மானத்தில் மேலும், பாஜக அரசின் கொரோனா கட்டுப்பாடு செயல்பாடுகள், சீனாவுடன் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை உள்ளிட்டவைகள் குறித்து விமர்சிக்கப்பட்டிருந்தன.
3.தீர்மானத்தில் மிக முக்கியமாக, “உட்கட்சி விவகாரங்கள் ஊடங்கங்கள் மூலமோ, பொதுத் தளத்திலோ கசியும்படி இருக்கக் கூடாது” என்று வலியுறுத்தப்பட்டது.
4.கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி, காங்கிரஸின் 23 முக்கிய நிர்வாகிகள் சேர்ந்து, ‘தலைமையில் நிகழும் ஸ்திரமற்றத் தன்மை' மற்றும் ‘தொண்டர்களின் ஏமாற்றமடைந்த மனநிலையை' சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார்கள். குலாம் நபி அசாத், கபில் சிபல், சசி தரூர் மற்றும் ஆனந்த் ஷர்மா உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து இந்த கடிதத்தை எழுதினார்கள். மேலும் கடிதத்தில், ‘காந்தி குடும்பத்தினர் ஒருங்கிணைந்த தலைமையில் எப்போதும் பங்கு வகிப்பார்கள்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
5.இந்த கடிதத்தினால் உஷ்ணமடைந்திருந்த சோனியா, நேற்றைய சந்திப்பின் ஆரம்பத்தில், ‘புதிய தலைவரை தேடுவதற்கான பணியைத் தொடங்குங்கள்' என்று வலியுறுத்தினார். ஆனால் அதன் பின்னர் வழக்கம் போல, அவரின் தலைமையைப் பாராட்டி, மற்றவர்கள் பேசத் தொடங்கினார்கள். ஒரு வேளை, சோனியாவால் தலைமையில் தொடர முடியவில்லை என்றால், ராகுல் அந்தப் பொறுப்புக்கு வர வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.
6.அன்னை சோனியா காந்தியுடன் சந்திப்பில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, கடிதம் எழுதியவர்கள் மீது கடுகடுத்துள்ளார் எனப்படுகிறது. “காங்கிரஸ் மிக வலுவிழந்த நிலையில் இருக்கும்போது, இப்படி கடிதம் எழுதுவதற்கான அர்த்தம் என்ன. மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் பிரச்னையை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இப்படியான நேரத்தில் ஏன் இப்படியான கடிதம்?” எனக் கேள்வியெழுப்பினாராம். மேலும் அவர், “யாருக்காக இப்படியொரு காரியம் செய்யப்பட்டது?” என்றும் கேட்டாராம்.
7.உட்கட்சித் தகவல்கள், கடிதம் எழுதியவர்கள் பாஜகவோடு கூட்டு வைத்துக் கொண்டுதான் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கடிதம் எழுதியுள்ளார்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளதாக கூறுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் கபில் சிபல், ராகுல் காந்திக்கு எதிரான ட்வீட்டைப் பதிவிட்டிருந்தார். ஆனால், ஒரு சில மணி நேரங்களிலேயே அப்படியான பதிவை நீக்கவிட்டு, “ராகுல் காந்தி, என்னை தொடர்பு கொண்டு அப்படியொரு விஷயத்தை தான் பேசவில்லை என்பதை கூறியுள்ளார். எனவே என் ட்வீட்டை நான் நீக்குகிறேன்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
8.காங்கிரஸ் காரிய கமிட்டியில் இருக்கும் நான்கு பேர், கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தனர். அவர்கள் நேற்றைய சந்திப்பில் பெரும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளனர். சிலர், கடிதம் எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டார்களாம். கடிதத்தை காரிய கமிட்டி சந்திப்பில் வாசித்த குலாம் நபி அசாத், பதவியைத் துறக்கத் தயார் என்றார்.
9.அசாத் போலவே, முகுல் வாஸ்னிக் மற்றும் ஆனந்த் ஷர்மா ஆகியோரும் தங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ஏற்றுக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர். அசாத், இந்திரா காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகியோரோடு பணி செய்தது குறித்து நினைவு கூர்ந்து உணர்ச்சிவயப்பட்டார் எனப்படுகிறது. மொத்தமாக கடிதம் எழுதியவர்கள், “நாங்கள் அனைவரும் நேரு வழி வந்தவர்கள். எங்கள் கருத்துகளோடு நீங்கள் வேறுபடலாம். ஆனால், எங்கள் நோக்கத்தை நீங்கள் சந்தேகப்பட முடியாது” என்று கூறியதாக தகவல்.
10.காரிய கமிட்டி சந்திப்பு முடிந்த பின்னர் அசாத், NDTV-யிடம் பேசும்போது, ‘சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் திருப்தியளிக்கின்றன' என்றார்.