பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி, ஞாயிறன்று பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் கருத்தை ஆதரித்து பேசியுள்ளார். அதில் "கார்டர்பூர் காரிடர் அடிக்கல்நாட்டு விழாவுக்கு எந்த இந்திய அமைச்சரும் பாகிஸ்தான் அழைப்பை ஏற்று செல்லக்கூடாது" என்று தெரிவித்துள்ளார். "அவர்கள் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தாதவரை எந்த நிகழ்ச்சிக்கும் இவர்கள் செல்லக்கூடாது" என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக பஞ்சாப் முதல்வர், "நவம்பர் 28ம் தேதி நடக்கும் அடிக்கல் நாட்டு விழாவுக்கு இந்திய வீரர்களையும், மக்களையும் கொன்று குவிக்கும் பாகிஸ்தான் நடத்தும் விழாவுக்கு செல்லக்கூடாது" என்று கூறியிருந்தார்.
"ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் கொல்லப்படுவது, இயல்பு வாழ்க்கையை சோதிப்பது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன" என்று பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெகமூத் குரேஷிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
பஞ்சாப் அமைச்சராக இருக்கும் நவ்ஜோத் சிங் சித்து, "கார்டர்பூர் காரிடர் அடிக்கல்நாட்டு விழாவுக்கு செல்வேன். இது போன்ற நிகழ்வுகள் தான் இருநாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்தும். இருநாடுகளும் இதற்காக அதிக முயற்சிகளை எடுத்து வருகின்றன. அப்போது அந்த முயற்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த நாம் ஒத்துழைப்பு தரவேண்டும்" என்று கூறியுள்ளார்.
நவம்பர் 28ம் தேதி அன்று இந்த காரிடருக்கான அடிக்கல் நாட்டு விழாவை பாகிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் துவக்கி வைக்கிறார்.