ஹைலைட்ஸ்
- தலாக், நிக்காஹ் ஹலாலா முறையை எதி்ர்த்த பெண்ணுக்கு ஃபத்வா விதிப்பு
- உ.பி மாநிலம் ரேபரேலி பகுதியைச் சேர்ந்தவர் நி்தா கான்
- இவருக்கு இஸ்லாமிய மதகுருமார்கள் ஃபத்வா தண்டனை விதித்துள்ளனர்
Bareilly: உத்திர பிரதேச மாநிலத்தில் தலாக் விவகாரம், நிக்காஹ் ஹலாலா போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த பெண்ணுக்கு இஸ்லாமிய குருமார்கள் ஃபத்வா விதித்துள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலத்தின் ரேபரேலி பகுதியில் வசித்து வரும் நிதா கான் என்னும் பெண் தனது கணவர் உஸ்மான் ரஸா கான் என்பவரை 2015ம் ஆண்டு திருமணம் செய்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னைகளை அடுத்து, மும்முறை தலாக் கொடுத்து இவரது கணவர் விவாகரத்து அளித்தார்.
இவர் தலாக் விவகாரத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றார். இதனையடுத்து நிதா கான் தலாக் விவகாரம், நிக்காஹ் ஹலாலா போன்ற பெண்களுக்கு எதிரான மத விவகாரங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், நிதா கான் மீது இஸ்லாமிய மதகுருமார்கள் அமைப்பு ஃபத்வா தண்டனை விதித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், இஸ்லாமிற்கு எதிரான பிரச்சாரம் மேற்கொண்டு நிதா கானோடு இனிமேல் எந்த முஸ்லிம்களும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது.
அவருக்கு மருத்துவம், பண உதவி போன்ற உதவிகளை யாரும் செய்யக்கூடாது. மேலும், அவர் மரணமடைந்தால் அவருக்கு இஸ்லாமியர்களுக்கான சுடுகாட்டில் இடம் தரக்கூடாது போன்ற விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை மீறுபவர்கள் கடும் தண்டனைக்கு ஆளாவார்கள என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதா கான் கூறுகையில், இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு யாருகம் யாருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. அவ்வாறு தண்டனை விதிக்கவேண்டுமென்று அவர்கள் நினைத்தால், அவர்கள் பாகிஸ்தான் போகட்டும். யார் தவறானவர்கள் என்பதை அல்லாவே முடிவு செய்வார் என்று தெரிவித்துள்ளார்.