This Article is From Mar 04, 2020

''கொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை'' - பிரதமர் மோடி உறுதி

கொரோனா பரவுவதைத் தடுக்க அடிப்படையாகச் செய்ய வேண்டிய அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

''கொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை'' - பிரதமர் மோடி உறுதி

உலகம் முழுவதும் 90 ஆயிரம்பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகின்றன
  • சீனா, ஈரான், தென்கொரியா, இத்தாலிக்கு பயணத்தை தவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்
  • இந்தியா வரும் வெளிநாட்டவர் தங்களது பயண முழு விவரத்தை தெரிவிக்க வேண்டும்
New Delhi:

கொரோனா வைரஸால் இந்தியாவில் புதிதாக 2 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். டெல்லி அருகே நொய்டாவிலும், பெங்களூருவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பரவுவதைத் தடுக்க அடிப்படையாகச் செய்ய வேண்டிய அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு அதிரடி நடவடிக்கையாகத் தென் கொரியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கான விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுடன், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். 

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், 'மத்திய மாநில அமைச்சர்கள், அரசுகளுடன் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினோம். இதனால் இந்தியர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். அடிப்படையாகச் செய்ய வேண்டிய கைகளைக் கழுவுதல், சுகாதாரமான உணவை உட்கொள்ளுதல், தும்மும்போது, இருமும்போது சுகாதாரமாக இருத்தல் போன்றவற்றைச் செய்தால் போதுமானது' என்று தெரிவித்துள்ளார். 

சீனா, ஈரான், தென் கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அனைத்து இந்தியர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள் தங்களது பயண விவரத்தை முழுமையாகக் குறிப்பிடும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கண்காணித்து வருவதாகவும், நிதிச் சந்தைகளின் ஒழுங்கான செயல்பாட்டை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

டெல்லி அருகே நொய்டாவில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில், 2 மாணவர்களின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 3 நாட்களுக்குப் பள்ளி மூடப்பட்டுள்ளது. 

ஆக்ராவில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற டெல்லியைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் அனைவரும் கட்டாய மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பானியர்களுக்கு மார்ச் 3 அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்ட விசாக்கள் மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ளன. 

ஜப்பான் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்தவர்களுக்கு மார்ச் 3 ஆம் தேதிக்குள் வழங்கப்பட்ட விசா-வருகையைச் சுகாதார அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காகப் பயணிக்க வேண்டியவர்கள் புதிய விசாவை நாடலாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

.