11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை: முதல்வர் கடிதம்!
ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்று சபாநாயகருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக சட்டசபையில் முதல்வச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ம்தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின் போது, தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில், திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உச்ச நீதிமன்றம் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று ஓ.பன்னீர் செல்வம், கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது. மணிப்பூர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கும் இந்த மனுவில் மேற்கோள் காட்டப்பட்டு உள்ளது.
இதனிடேயே 11 பேர் தகுதி நீக்கம் தொடர்பான இந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய திருப்பம் ஏற்படுத்தும் வகையில் சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் அவர், ''நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 122 பேருக்கு மட்டுமே கொறடாவின் உத்தரவு அனுப்பப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவு அனுப்பப்படவில்லை. அதிமுக பேரவைக் கட்சித் தலைவராகத் தன்னை தேர்வு செய்த 122 உறுப்பினர்களுக்கு மட்டுமே கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அரசுக்கு எதிராக 11 எம்எல்ஏக்கள் வாக்களித்திருந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு எதிராகச் செயல்படவில்லை. 11 எம்எல்ஏக்கள் தனியாகச் செயல்பட்டிருந்தாலும் இப்போது ஒரு அணியாகச் செயல்படுகிறோம். உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 11 எம்எல்ஏக்கள் பிரிந்திருந்த சமயத்தில் தாக்கல் செய்யப்பட்டவை. எனவே இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.