Corona Virus: "மக்கள் கொரனா வைரஸ் குறித்து எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம்."
Corona Virus: உலகளவில் ‘உஹான் வைரஸ்' எனப்படும் கொரனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் உஹான் என்னும் நகரத்தில் இருந்துதான் இந்த வைரஸ் பரவியதாகவும், அதனாலேயே இந்த புதிய வைரஸுக்கு உஹான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன அரசு தரப்பு தெரிவிக்கிறது.
பல கோடி மக்களை முடக்கி கொரனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சீனா, அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் கொரனா வைரஸால் பாதிப்பு உருவாகுமா என்று சந்தேகம் எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்துள்ளார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
இன்று சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் கொரனா வைரஸ் பற்றி பேசிய விஜயபாஸ்கர், “தமிழகத்தைப் பொறுத்தவரை கொரனா வைரஸ் பாதிப்பு இல்லை. அதனால் மக்கள் கொரனா வைரஸ் குறித்து எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம். கொரனா பாதிப்பு இருக்கக் கூடாது என்பதற்காக விமான நிலையங்கள், துறைமுகங்களில் தொடர்ந்து மக்களிடம் பரிசோதனை செய்து வருகிறோம். விமான நிலைய மற்றும் துறைமுக வட்டாரங்களோடு தமிழக அரசும் சுகாதாரத் துறையும் தொடர்ந்து நெருக்கமாக பணி செய்து வருகிறது. மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்”, என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
மிருகங்கள் வாயிலாகவே இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவியிருக்கும் என்று சந்தேகப்படும் சீன அரசு தரப்பு, கள்ள விலங்கு சந்தையிலிருந்து இந்த வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கணித்துள்ளது. உஹான் வைரஸின் தாக்கம் அதிகம் இருப்பதால் உஹான் நகரத்தில், பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.