This Article is From Apr 21, 2020

கொரோனாவை வென்ற கோவா!! 2 வாரங்களாக யாருக்கும் பாதிப்பு இல்லை!

இந்தியாவில் 17,265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 543 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவை வென்ற கோவா!! 2 வாரங்களாக யாருக்கும் பாதிப்பு இல்லை!

கோவாவில் அரசுப் பணியாளர்கள் அனைவரும் இன்று பணிக்கு திரும்பியுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • கோவாவில் கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்
  • கடந்த 2 வாரங்களாக புதிதாக கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்படவில்லை
  • மணிப்பூர் மாநிலத்திலும் கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக அறிவிப்பு
New Delhi:

நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோவாவில் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கடந்த 2 வாரங்களாக அதாவது ஏப்ரல் 3-ம் தேதியில் இருந்து புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

ஏற்கனவே 7 பேருக்கு மட்டும்தான் கொரோனா தொற்று இருந்தது. தற்போது அவர்கள் அனைவரும் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி லாவ் அகர்வால், 'கோவாவுக்கு மகிழ்ச்சியான செய்தி. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்' என்றார்.

இதற்கிடையே நேற்று 110 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 64 பேருக்கு நெகடிவாக முடிவுகள் வந்துள்ளன. இன்னும் 46 பேருக்கு முடிவுகள் வரவேண்டியுள்ளது.

இதுகுறித்து மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தனது ட்விட்டர் பதிவில், 'தற்போது கோவா முழுவதுமாக கொரோனா பாதிப்பிலிருந்து வெளியே வந்து விட்டது. இதற்காக கடுமையாக உழைத்த மருத்துவர்கள், அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 3-ம்தேதியில் இருந்து இங்கு யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை' என்று தெரிவித்துள்ளார். 
 

கோவாவில் அரசுப் பணியாளர்கள் அனைவரும் இன்று பணிக்கு திரும்பியுள்ளனர். இதேபோன்று மணிப்பூரிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு முழுவதும் நீங்கி விட்டதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,'மணிப்பூரில் கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கி விட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே 2 பேருக்கு பாதிப்பு இருந்தது. தற்போது அவர்கள் குணம் அடைந்து விட்டார்கள். புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை' என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் 17,265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 543 பேர் உயிரிழந்துள்ளனர். 

.