டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70-ல் 62 தொகுதிகளைக் கைப்பற்றியது.
New Delhi: டெல்லி அமைச்சரவையில் புதியவர்கள் எவருக்கும் இடம் அளிக்கப்படவில்லை என்றும், முன்னர் அமைச்சர்களாக இருந்தவர்களே மீண்டும் தொடர்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில் அரசுக்கு ஆலோசகர்களாக இருந்த ராகவ் சதா, அதிஷி ஆகியோர் இடம் பெறுவார்கள் என தகவல் பரவிய நிலையில் புதிதாக யாரும் சேர்க்கப்பட மாட்டார்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
'அமைச்சர்களின் கடின உழைப்பால் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளோம். எனவே அவர்களை மீண்டும் பொறுப்பில் தொடரச் செய்வதுதான் சரியானதாக அமையும்' என கெஜ்ரிவால் கருதுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வரையில் மணிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெய்ன், கோபால் ராய், கைலாஷ் கலோட், இம்ரான் உசைன், ராஜேந்திர பால் கவுதம் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி 70-ல் 62 இடங்களைக் கைப்பற்றியது. இதற்கு முன்பாக 2015-ல் நடந்த தேர்தலின்போது ஆம் ஆத்மி 67 இடங்களில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை சட்ட திருத்தத்தை முன் வைத்து பாஜக பிரமாண்ட பிரசாரங்களை டெல்லியில் மேற்கொண்டது. என்.ஆர்.சி., என்.பி.ஆர்.-யை மையப்படுத்தியும் பிரசாரம் செய்யப்பட்டது. இந்த சூழலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் செய்த மக்கள் சேவைக்கு கிடைத்த பரிசுதான் சட்டமன்ற தேர்தல் வெற்றி என்று ஆம் ஆத்மி கட்சியினர் கூறுகின்றனர். குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் செய்த சேவையே முக்கிய காரணம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வெற்றிக்கு பின்னர் பேசிய கெஜ்ரிவால், 'புதுவிதமான அரசியல் டெல்லியில் உதித்துள்ளது. டெல்லி மக்கள் தங்களுக்கு கிடைத்த பள்ளி வசதி, தெருவாரியான கிளினிக், 24 மணிநேர மின்சார வசதி மற்றும் இலவச குடிநீருக்காக எங்களுக்கு வாக்களித்துள்ளனர். இதில் மிகப்பெரும் செய்தி இந்த நாட்டிற்கு உள்ளது' என்று குறிப்பிட்டார்.
நேற்று முதற்கொண்டு, அரசின் ஆலோசகராக இருந்த ஆம் ஆத்மியின் செய்தி தொடர்பாளர் ராகவ் சதா, மணிஷ் சிசோடியாவிடம் இருந்து நிதித்துறை பொறுப்பை ஏற்பார் என தகவல் பரவியது.
இதேபோன்று மணிஷ் சிசோடியாவுக்கு உதவியாக இருக்கும் அதிஷிக்கு கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்றும் தகவல் வெளிவரத் தொடங்கியது. இருப்பினும், தனது துறைகளை மற்றவர்களுக்கு அளிப்பதில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு விருப்பம் இல்லை என்று கருதுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி அரசில் ஆலோசகராக இருப்பது என்பது சட்டவிரோதமானது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாக அரசுக்கு 9 ஆலோசகர்கள் இருந்தனர். இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்காததால் இந்த பொறுப்புகள் கடந்த 2018 ஏப்ரலில் நீக்கப்பட்டன. இது டெல்லி அரசின் நலத்திட்ட பணியில் மத்திய அரசு வேண்டுமென்றே குறுக்கிடும் செயல் என ஆம் ஆத்மி விமர்ச்சித்திருந்தது.