ஹைலைட்ஸ்
- அமித்ஷாவின் பேரணிக்கு மேற்கு வங்க அரசு அனுமதி மறுக்கிறது, பாஜக
- போலீஸ் கைது செய்தாலும் கொல்கத்தாவுக்கு செல்வேன், அமித்ஷா
- கொல்கத்தா போலீஸ் தலைமையகத்துக்கு வெளியே பாஜக போராட்டம் நடத்த உள்ளது
New Delhi: அசாம், இறுதி குடியுரிமை வரைவு வெளியிட்டதில் இருந்து திரிணாமூல் காங்கிரஸுக்கும் பாஜக-வுக்கும் இடையிலான மோதல் முற்றியுள்ளது. இரு கட்சியின் தலைவர்களான மம்தா பானர்ஜியும் அமித்ஷாவும் நேரடி கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்றும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இந்திய அளவில் பாஜக பலவீனமாக இருக்கும் சில மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. அதனால், அங்கு தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட அமித்ஷா பல திட்டங்களை வகுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக வரும் 11 ஆம் தேதி அவர் மேற்கு வங்கத்துக்குச் சென்று, கொல்கத்தாவில் நடக்கும் பேரணி ஒன்றில் பேச உள்ளார். அவரின் பேரணிக்கு கொல்கத்தா போலீஸ் அனுமதி மறுக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து அமித்ஷா, ‘என்னை வேண்டுமானால் அவர்கள் கைது செய்து கொள்ளட்டும்’ என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதற்கு மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜி, ‘அமித்ஷா அவருக்கு விருப்பப்பட்ட இடத்துக்கு செல்லலாம். அவரை யார் தடுக்கிறார்கள்?’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக-வின் பேரணிக்கு கொல்கத்தா மாநகராட்சி அனுமதி கொடுக்கவில்லை. அதையடுத்து பாஜக, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பேரணிக்கு அனுமதி வாங்கியது. பின்னர் அந்தப் பேரணி 2014 ஆம் ஆண்டு, நவம்பர் மாதல் 4 ஆம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.