சென்னை மெரினா கடற்கரையில் தமிழக மக்கள் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஜல்லிகட்டுக்கான தடையும் விலகியது. அதன் பிறகு மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்தது.
இந்நிலையில், தமிழக அரசு விதித்த தடைக்கு எதிராகவும், மெரினா கடற்கரையில் ஒரு நாள் போராட்டம் நடத்த அனுமதிக்க கோரியும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
ஆனால், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதிகள் மெரினாவில் போராட்டம் நடத்தக்கூடாது என்பது தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து, அய்யாகண்ணு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது என்றும் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.