இட ஒதுக்கீடு முறையைக் காக்க எங்களால் ஆன அனைத்து வித முயற்சியிலும் நாங்கள் இறங்குவோம் என்று ஆவேசமாக பேசியுள்ளார் நிதிஷ் குமார்
பிகார் முதல்வர் நிதிஷ் குமார், ‘இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் இட ஒதுக்கீடு முறையை யாராலும் அழிக்க முடியாது' என்று கருத்து கூறியுள்ளார்.
பிகாரின் முக்கிய அரசியல் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹா பாட்னாவில் தனது கட்சியினர் முன்னிலையில் பேசிய போது, ‘பிகார் முதல்வர் நிதிஷ் குமார், பல ஆண்டுகளாக பதவியில் இருந்து விட்டதால், அதைத் துறக்க விரும்புவதாக தெரிகிறது. நான் இப்படி கூறுவதால் நிதிஷ் குமாரை பதவி விலகச் சொல்லவில்லை. அவரைப் பற்றி அவருக்குத் தான் நன்றாக தெரியும்' என்று சூசகமான முறையில் பேசியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஐஜத தரப்பு இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. பாஜக கூட்டணியில் இருந்த ஐஜத, 2013 ஆம் ஆண்டு வெளியேறியது. அப்போது நிதிஷ் குமார் கூட்டணி முறிவுக்குக் காரணமாக, நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவித்ததைச் சுட்டிக் காட்டினார். சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் பாஜக-வுடன் கூட்டணி வைத்தார் நிதிஷ்.
இந்நிலையில் கடந்த மாதம் ஒரு கூட்டத்தில் பேசிய குஷ்வாஹா, ‘பிகாரில் இருக்கும் மிக முக்கியத் தலைவர் ஒருவர், மோடியை மீண்டும் பிரதமராகப் பார்க்க விரும்பவில்லை' என்றார். குஷ்வாஹா, அந்தத் தலைவரின் பெயரைக் குறிப்படிவில்லை என்றாலும், அவர் நிதிஷ் குமாரைத் தான் சொல்கிறார் என்று ஆருடம் சொல்லப்பட்டது.
இப்படி தொடர்ந்து சர்ச்சைப் பொருளாக மாறி வருகிறது பிகார் அரசியல் களம். இந்நிலையில் நேற்று நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய நிதிஷ் குமார், ‘இட ஒதுக்கீடு முறை இல்லையென்றால், விளிம்பு நிலையில் இருப்பவர்கள் எப்படி முன்னுக்கு வருவார்கள். இட ஒதுக்கீடு குறித்து இருக்கும் சட்டத்தை மாற்ற இந்த நாட்டில் நாருக்கும் அதிகாரம் கிடையாது. இட ஒதுக்கீடு முறையைக் காக்க எங்களால் ஆன அனைத்து வித முயற்சியிலும் நாங்கள் இறங்குவோம்' என்று ஆவேசமாக பேசியுள்ளார்.