‘பாஜக-வுடன் எந்தத் தமிழக கட்சிகலும் கூட்டணி வைக்க விரும்பவில்லை’ என்று கேலியாக பேசியுள்ளார் திருநாவுக்கரசர்
ஹைலைட்ஸ்
- தம்பிதுரை, பாஜக-வுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்
- தினகரன், பாஜக-வுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றுள்ளார்
- தற்சமயம் பாஜக-வுடன் எந்தக் கட்சியும் கூட்டணி வைக்கவில்லை
இன்னும் ஒரு சில மாதங்களில் லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் கூட்டணி காய் நகர்த்தல்கள் படு ஜோராக நடந்து வருகின்றன. குறிப்பாக தமிழக பாஜக-வினர் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘நம் பழைய நண்பர்களுக்குக் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது' என்று சூசக அழைப்பு விடுத்தார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘மோடி தலைமையிலான கூட்டணியை திமுக ஏற்காது' என்று பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் பாஜக, தமிழக ஆளுங்கட்சியான அதிமுக-வுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாக தொடர்ந்து ஆருடம் சொல்லப்பட்டு வருகிறது. மேலும் பாஜக தரப்பு, தினகரனின் அமமுக- அதிமுகவை இணைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் கூட்டணி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் வரத் தொடங்கும் என்று தமிழக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர், ‘பாஜக-வுடன் எந்தத் தமிழக கட்சிகலும் கூட்டணி வைக்க விரும்பவில்லை' என்று கேலியாக பேசியுள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், ‘பாஜக, யாருடனாவது கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று பார்க்கிறது. ஆனால் அதிமுக தரப்பிலோ தம்பிதுரை, பாஜக-வுடன் எந்த உறவும் வேண்டாம் என்று தொடர்ந்து கூறி வருகிறார். தினகரனோ, எந்த நேரத்திலும் பாஜக-வுடன் கூட்டணி கிடையவே கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவரையும் இணைத்து, கூட்டணி வைக்க வேண்டும் என்று பாஜக முயற்சி எடுப்பதாக தெரிகிறது.
பிரதமர் மோடியே, தமிழக கட்சிகளுக்குக் கூட்டணியில் இணையுமாறு பகிரங்க அறிவிப்பு விடுத்தார். ஆனால், அவர்களுடன் இணைய ஒருவரும் விரும்பவில்லை' என்று கிண்டல் செய்யும் தொனியில் பேசியுள்ளார்.