தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படாது; அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படாது - செங்கோட்டையன்
- ஆன்லைன் வழிக்கல்வி இல்லை எனவும் டிவி மூலமே பாடம் கற்பிக்கப்படும்
- ஆன்லைன் வகுப்புக்காக 3 தொலைக்காட்சிகள் தயாராக உள்ளன
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படாது என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளிகளில் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த முடியாமல் போனது, இதன் காரணமாக தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, கொரோனா பரவல் குறையாத காரணத்தினால் பொதுமுடக்கம் அடுத்தடுத்த மாதங்களாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்விமுறையில் வகுப்புகளை நடத்த துவங்கியுள்ளன. இதனிடையே, ஆன்லைன் கல்விமுறை தேவையா, இல்லையா என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் விவாதம் நடந்து வருகிறது.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளிலும் வரும் ஜூலை 13ம் தேதி முதல் ஆன்லைன் கல்விமுறை தொடக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்றை தினம் அறிவித்திருந்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்ட உடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு சேனல் என்று 5 தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் ஆன்லைன் வழிக்கல்வி இல்லை எனவும் டிவி மூலமே பாடம் கற்பிக்கப்படும் என்றும் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறும்போது, ஆன்லைன் வகுப்புகள் என்று சொன்னது கல்வி தொலைக்காட்சி சேனல் வழியாக நடத்தப்படுவது ஆகும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புக்காக 3 தொலைக்காட்சிகள் தயாராக உள்ளன என்றார்.
இந்த கல்வி தொலைக்காட்சிகளை தவிர்த்து பொதிகை தொலைக்காட்சியிலும் மற்றும் சில தனியார் தொலைகாட்சிகளிலும் வகுப்புகள் ஒளிபரப்பப்பட உள்ளன. ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் தினமும் சில குறிப்பிட்ட நேரங்கள் ஒதுக்கப்பட்டு, சில வகுப்புகளுக்கான பாடங்கள் அதன்மூலம் ஒளிபரப்ப திட்டமிட்டு இருக்கிறோம்.
மேலும், 12ம் வகுப்பில் மீதமுள்ள ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது. 12ம் வகுப்பில் எஞ்சிய தேர்வை எழுதாதவர்களை எப்படி தேர்ச்சியடைய செய்ய முடியும். மீதமுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கு, மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.