கடந்த ஆண்டு பிற்பகுதியில் சீனாவில் வெளிவந்த கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் பரவியதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
Geneva: சர்வதேச அளவில் கொரோனா தொற்றுக்கு 35 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் அமெரிக்காவில் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையானது கடுமையாக அதிகரித்துள்ளது. இந்நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கையானது ஏறத்தாழ 70 ஆயிரத்தினை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றானது சீன ஆய்வகங்களிலிருந்துதான் பரவியுள்ளது என அமெரிக்கா தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறது. அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாக இக்குற்றச்சாட்டினை முன்வைத்தார். ஆனால், அமெரிக்க அதிபர் முன்வைத்த யூக அடிப்படையிலான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை வாஷிங்டன் தங்களுக்கு வழங்கவில்லை என உலக சுகாதார அமைப்பு (WHO) தற்போது கூறியுள்ளது.
“கொரோனா வைரஸ் குறிப்பிட்ட இடத்திலிருந்துதான் உருவாகியுள்ளது என நிரூபிக்கும் எவ்வித தரவுகள் மற்றும் ஆதாரங்களை நாங்கள் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து பெறவில்லை” என உலக சுகாதார அமைப்பின் அவசரக்கால இயக்குநர் மைக்கேல் ரியான் கூறியுள்ளார்.
விஞ்ஞானிகள் சிலர், கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதாக நம்புகின்றனர். இந்த வைரஸ் முதன் முதலில் சீனாவில் கடந்த ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்டது. இது சீனாவின் வூகான் மாகாணத்தில் உள்ள விலங்குகளின் இறைச்சி பண்ணையிலிருந்து பரவியிருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது.
சீனாவின் வூகான் மாகாணத்தில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சீனாவிலிருந்துதான் கொரோனா பரவியது என ட்ரம்ப் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ சீனாவிலிருந்து வைரஸ் பரவியதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால், சீனா இந்த குற்றச்சாட்டினை கடுமையாக மறுத்துள்ளது.
இந்த நிலையில், வைரஸ் பரவலுக்கான ஆதாரம் இருப்பின் அதனை பெற நாங்கள் தயாராக இருக்கிறோம் என ரியான் கூறியுள்ளார்.
தொடக்கத்தில் சீனாவை காப்பாற்றுவதற்காக உலக சுகாதார அமைப்பு, வைரஸ் தொற்று பரவலை குறைத்து மதிப்பிட்டதாக அமெரிக்கா விமர்சித்திருந்தது.
சமீபத்தில் நடைபெற்ற மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் நிபுணர் மரியா வான் கெர்கோவ், “கொரோனா வைரஸ் நாவலின் 15,000 முழு மரபணு வரிசை முறைகள் கிடைத்திருக்கிறது. நாங்கள் பார்த்த எல்லா ஆதாரங்களிலிருந்தும் இந்த வைரஸ் இயற்கையான தோற்றம் கொண்டதுதான்“ எனக் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று வௌவால்களிலிருந்து பரவியிருந்தாலும், இது எவ்வாறு மனிதனை தாக்கியது என்பதை கண்டறிவதற்கான முக்கியத்துவத்தின் அவசியம் குறித்து வான் கெர்கோவ் மற்றும் ரியான் இருவரும் வலியுறுத்தியிருந்தனர்.
“வைரஸின் இயற்கை தோற்றம் மற்றும், எதிலிருந்து மனிதனுக்கு எவ்வாறு பரவியது என்பது குறித்து நாம் அதிகம் புரிந்துகொள்ள வேண்டும்“ என்று ரியான் கூறியுள்ளார். மேலும், “மேற்குறிப்பிட்ட புரிதல் என்பது இவ்வாறான தொற்று மீண்டும் மனிதனுக்கு பரவுவதை தடுக்கும் வகையில் கொள்கைகளை உருவாக்க எங்களுக்கு உதவும்“ என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் 2,50,00க்கும் அதிகமான மக்களை கொரோனா வைரஸ் கொன்றுள்ளதால், ஒரு விரிவான விசாரணைக்கு சீனா ஒத்துழைக்க வேண்டும் என ரியான் குறிப்பிட்டுள்ளார். மேலும், சீனா விஞ்ஞானிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தவறுகளை அவசரமாக விசாரிப்பது என்பது, கொரோனா தொற்று பரவலை கையாள்வதை மிகக் கடிணமாகிவிடும். தற்போது அரசியல் பிரச்சனைகள் நடந்து வருகின்றன. அறிவியல் என்பது அனைத்திற்கும் பொதுவில் சார்பற்றதாக இருக்க வேண்டும். வைரஸின் தொடக்கம் மற்றும், இடைநிலையில் ஏற்பட்ட பரிணாமம் குறித்த விரிவான விசாரணை என்பது கிரகத்தில் உள்ள அனைவருக்கும் பயனளிக்கும்." என ரியான் கூறியுள்ளார்.