மோடியின் இந்த அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தரப்பு பதில் அளித்துள்ளது
New Delhi: பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, “ஐ.என்.எஸ் விராட் போர் கப்பலை தன் சொந்த டாக்சி போல முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பயன்படுத்தினார்” என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளார் ஐ.என்.எஸ் விராட் கப்பலின் முன்னாள் கமாண்டர் வினோத் பஸ்ரிசா.
1987 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி, தனது மாமியார் மற்றும் நண்பர்களுடன் ஐ.என்.எஸ் விராட் போர் கப்பலில் லக்ஷதீபம் சென்றுள்ளார் என்று சுட்டிக்காட்டிதான் பிரதமர் மோடி, குற்றம் சாட்டினார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள வினோத் பஸ்ரிசா, NDTV-யிடம் பேசுகையில், “ராஜீவ் காந்தி, தன் மனைவி சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி மற்றும் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் வந்தார். அவர் லக்ஷதீபத்தில் அரசு வேலைக்காக சென்றார். குடும்ப சுற்றுலாவுக்காக அல்ல” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
மோடி இந்த விவகாரம் குறித்து பேசுகையில், நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் சோனியா காந்தியின் தாயார் உள்ளிட்டோர், ராஜீவுடன் சென்றனர் என்றார். அந்த குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார் பஸரிசா. “நான் முன்னர் கூறிய மூன்று பேரைத் தவிர வேறு யாரும் போர் கப்பலில் வரவில்லை. பாதுகாப்புப் படையை இப்படி அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவது சரியல்ல” என்றார்.
இந்த சம்பவம் நடந்தபோது கடற்படையில் கமாண்டர்-இன்-சீஃபாக இருந்த அட்மிரல் எல்.ராம்தாஸும் இப்படியொரு விஷயத்தைத் தான் சொன்னார். இது குறித்து அறிக்கை வெளியிட்ட அட்மிரல் ராம்தாஸ், “பிரதமர் மோடி சொன்னது போல எதவும் நடக்கவில்லை. இந்தியா டுடே இதழில் வெளியான ஒரு செய்தியை வைத்து அவர் பேசியிருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.
மோடியின் இந்த அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தரப்பு, “ஓய்வு பெற்ற துணை அட்மிரல் வினோத் பஸரிசா இது குறித்து தெளிவுபடுத்திவிட்டார். ராஜீவ் காந்தி, அரசு வேலைக்காத்தான் ஐஎன்எஸ் விராட் கப்பலை பயன்படுத்தினார். இந்த உண்மை குறித்தெல்லாம் மோடிக்கு கவலை இல்லை. மோடி, எதையும் சாதிக்கவில்லை என்பதால், இப்படியெல்லாம் பேசி வருகிறார்” என்று தெரிவித்துள்ளது.
மேலும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா இது குறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஊடகங்களில் வெளியான ஆர்.டி.ஐ அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி, “பிரதமராகிய நீங்கள் இந்திய விமானப் படையின் ஜெட்களை உங்களது டாக்சி போல பயன்படுத்தியுள்ளீர்கள். அதவும் 744 ரூபாய் வாடகைக்கு” என்று பேசியுள்ளார்.