பட்ஜெட் கூட்டத்தொடரில் 10 அமர்வுகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
New Delhi: பட்ஜெட் கூட்டத் தொடரில் அமளி செய்யாமல் அமைதி காப்போம் என அனைத்துக் கட்சிகளும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் உறுதி அளித்துள்ளன.
பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி 13-ம் தேதி வரைக்கும் நடைபெறுகிறது. இதுதொடர்பாக நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நடத்தினார். இதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சுமித்ரா மகாஜன் கூறியதாவது-
அனைத்துக் கட்சிகளும் பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளன. விவசாயிகள் பிரச்னை தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி இருக்கின்றன.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் பேசி இந்த கூட்டத் தொடரை ஆக்கப்பூர்வமாக உறுப்பினர்கள் மாற்றியமைக்க வேண்டும். 10 அமர்வுகள் இந்த கூட்டத் தொடரில் இருக்கும்.
இவ்வாறு சுமித்ரா மகாஜன் கூறினார்.